50வருடங்களுக்கு பின்னர் உப்புக்டேணி குளம் தூர் வாரப்பட்டது..!

சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணிக் குளம் சுமார் 50வருட காலத்திற்குப் பின்னர் சாவகச்சேரி நகரசபையினரின் முயற்சியால் தூர்வாரப்பட்டு அதிக நீரை கொள்ளக்கூடிய விதமாக அமைக்கப்படுகின்றது.

சாவகச்சேரியின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் மாரி காலத்தில் வெள்ள நீர் உப்புக்கேணிக் குளத்தை வந்தடைந்து- மேலதிக நீர் வடிகால் ஊடாக கச்சாய் கடலை சென்றடைவது வழமை.

ஆனால் சில வருடங்களுக்கு முன் அதிகளவில் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டடங்கள் உள்ளிட்ட முறையற்ற அபிவிருத்திகளால் உப்புக்கேணிக் குளத்தின் மேலதிக நீர் கடலைச் சென்றடையும் வடிகால் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயுள்ளது.

குளம் நீண்ட காலமாக எந்தவித புனரமைப்பும் இன்றிக் காணப்படுவதனாலும்-வடிகால்கள் மூடப்பட்டதனாலும் ஒவ்வொரு மாரி காலத்திலும் அப்பகுதியைச் சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ள இடரைச் சந்திக்க வேண்டியும்-தொற்று நோய்களுக்கு ஆளாக வேண்டிய துன்ப நிலையும் காணப்பட்டது.

குறிப்பாக கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் உப்புக்கேணிக் குளத்தை சூழவுள்ள மக்களை பெரிதும் பாதித்திருந்தது.மக்கள் இணைந்து தொடர்ச்சியாக இரவு-பகலாக மூன்று நாட்கள் நீர்ப்பம்பி ஊடாக குளத்து நீரை கடலுக்குள் இறைத்து வெள்ள இடரை சமாளித்திருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் மேற்படி விடயத்தை அரசாங்க அதிபர்,பிரதேச செயலர்,நகரசபை செயலாளர் உள்ளிட்டோரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

குறிப்பாக குளத்தினை ஆழப்படுத்தி அதிக நீரை கொள்ளச் செய்வதுடன்-மேலதிக நீர் கடலைச் சென்றடைய ஏதுவாக வடிகால் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்பின்னர் குளத்திற்கான வடிகால் அமைப்பதற்காக சாவகச்சேரி நகரசபையால் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 7மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர் அண்மையில் ஆட்சியமைத்த புதிய சபையினர் முதற்கட்டமாக மாரிமழைக்கு முன்னர் குளத்தினை தூர்வாரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனூடாக குளத்தினுள் அதிகளவு நீரை உள்ளடக்கி வெள்ள அனர்த்தத்தை ஓரளவிற்கு கட்டுப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

சுமார் 50வருட காலத்திற்குப் பின்னர் மேற்படி குளம் தூர்வாரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Recommended For You

About the Author: admin