இரவில் பிடியாணை இன்றி வீடுகளுக்குள் நுழைய முடியாது: ஜனாதிபதி வழக்கறிஞர் எச்சரிக்கை

இரவில், தேடுதல் பிடியாணை இல்லாமல் வீடுகளுக்குள் நுழைந்து சோதனை செய்யும் அதிகாரம் காவல்துறை அதிகாரிகளுக்கு இல்லை என ஜனாதிபதி வழக்கறிஞர் உப்புல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில், 1997ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு முக்கிய தீர்ப்பை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டங்களை அறியாத காவல்துறை அதிகாரிகள், 1997ஆம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்கவின் வீட்டிற்குள் காவல்துறையினர் பலவந்தமாக நுழைந்தது தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் படிக்குமாறு ஜனாதிபதி வழக்கறிஞர் அறிவுறுத்தியுள்ளார்.

1997ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி அன்று அதிகாலை 2.15 மணியளவில், குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எந்தவிதமான பிடியாணையும் இல்லாமல் அனுர பண்டாரநாயக்கவின் வீட்டிற்குள் நுழைந்தனர்.

நாலந்த எல்லாவல கொலை வழக்கில் சந்தேக நபராக இருந்த முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவைச் சோதனையிடுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து, தனது வீட்டிற்குள் காவல்துறை பலவந்தமாக நுழைந்தமை தனது அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என அனுர பண்டாரநாயக்க SC/FR/239/97 என்ற அடிப்படை உரிமைகள் வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, காவல்துறை அதிகாரிகளின் செயல் அனுர பண்டாரநாயக்கவின் அடிப்படை உரிமைகளை மீறியது எனத் தீர்ப்பளித்தது.

இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பு, காவல்துறை அதிகாரங்களின் வரம்புகளை வரையறுக்கும் ஒரு முக்கிய முன்னுதாரணமாக இன்றும் கருதப்படுகிறது.

Recommended For You

About the Author: admin