உலக பழங்குடி மக்களின் சர்வதேச தின தேசிய கொண்டாட்டம் இன்று காலை (9) தம்பானையில் உள்ள பழங்குடி அருங்காட்சியக வளாகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
1996ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற பூர்வீக குடிமக்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்றதைத் தொடர்ந்து, இலங்கையின் முதன்மையான பூர்வீக குடிமக்கள் தலைவர் விஸ்வ கீர்த்தி வனஸ்பதி உருவரிகே வன்னிலா அத்தோ, இலங்கையில் உலக பழங்குடி மக்கள் தினத்தை கொண்டாடும் பாரம்பரியத்தை ஆரம்பித்தார்.
அதன்படி, இலங்கையில் முதல் தேசிய பழங்குடி மக்கள் தின கொண்டாட்டம் 1999ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்றது.
இந்த ஆண்டு பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கொண்டாட்டம், அமைதி மற்றும் சுபீட்சத்திற்கான ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக நடத்தப்படும் பாரம்பரிய ‘கிரி கோரஹ’ சடங்கு உட்பட பழங்குடி சமூகத்திற்கு தனித்துவமான கலாசார நிகழ்வுகளுடன் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பழங்குடி சமூகத்தின் மறைந்த தலைவர் உருவரிகே திசஹாமி அத்தோவின் சிலைக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மலரஞ்சலி செலுத்திய பின்னர், அருங்காட்சியகத்தின் மத்திய முற்றத்தில் வெள்ளை சந்தன மரக் கன்றை நடும் நிகழ்வுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில், இலங்கையின் தற்போதைய பூர்வீக சமூகத் தலைவர் விஸ்வ கீர்த்தி ஸ்ரீ வனஸ்பதி உருவரிகே வன்னிலா அத்தோ, பழங்குடி சமூகத்தினரின் கவலைகளை கோடிட்டுக் காட்டும் செய்தியையும், நினைவுப் பலகையையும் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
பழங்குடி சமூகத்தினரின் உற்பத்திகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கான கடைகள் அமைக்கும் பணிகளை ஆரம்பிப்பது, பாரம்பரிய அறிவு மற்றும் உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது பழங்குடி மூலிகைத் தயாரிப்பான “கயிரி” மூலிகை சவக்காரத்தை அறிமுகம் செய்வது உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த நிகழ்வில் இடம்பெற்றன.
மேலும், ஆயுர்வேத சவக்காரம் தயாரிக்கும் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த பழங்குடிப் பெண்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

