மேலும் 40 நாடுகளுக்கு விசா கட்டணம் தள்ளுபடி: சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சி

இலங்கை மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ள நிலையில், மேலும் பல நாடுகள் இதேபோன்ற சலுகையை தங்கள் குடிமக்களுக்கும் வழங்குமாறு கோரியுள்ளன.
முன்னதாக, இலங்கை ஏழு நாடுகளுக்கு இந்த சலுகையை வழங்கியிருந்தது.

தற்போது, அந்த பட்டியலில் மேலும் 40 நாடுகளை இணைக்க அரசாங்கம் கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு சட்டமா அதிபரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்ததும், நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு, இந்த புதிய விசா ஒழுங்குமுறை இந்த மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், இந்த நாடுகளில் உள்ள மக்கள் சுற்றுலா விசாவுக்கு இலவசமாக இணையம் மூலமாக விண்ணப்பிக்க முடியும்.

பல நாடுகளின் கோரிக்கை இதற்கிடையில், இந்த சலுகையை தங்கள் குடிமக்களுக்கும் நீட்டிக்க முடியுமா என்று பல நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் விசாரித்துள்ளன. ஆரம்பத்தில், இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தைகளாக உள்ள நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்பட்டியலில் மேலும் பல நாடுகளைச் சேர்ப்பது குறித்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹெவாவசம் கூறுகையில், “இந்த முடிவு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின்னரே அதுபற்றி பரிசீலிக்கப்படும்” என்றார்.

கொழும்பை தளமாகக் கொண்ட முன்னணி சிந்தனைக் குழுவான அட்வகேட்டா இன்ஸ்டிடியூட், சுற்றுலாத்துறையின் முழு பொருளாதார திறனையும் மேம்படுத்த நீண்டகால விசா தாராளமயமாக்கலும், சீரான விசா கொள்கைகளும் அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

அட்வகேட்டா இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அவையாவன:

* விசா ஆன் அரைவல் (Visa-on-arrival) வசதியை மீண்டும் கொண்டு வருதல்.
* தகுதியான சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கான பயண நடைமுறைகளை எளிதாக்குதல்.
* அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொலைதூர ஊழியர்களை ஈர்க்கும் வகையில் நீண்ட கால, புதுப்பிக்கத்தக்க விசாக்களை அறிமுகப்படுத்துதல்.
* அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் செல்ல செல்லுபடியான பலமுறை நுழைவு விசா வைத்திருக்கும் பயணிகளுக்கு விசா ஆன் அரைவல் வசதியை வழங்குதல்.
சுற்றுலா விசா கட்டணத்தை தள்ளுபடி செய்யும் இந்த நடவடிக்கை, சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு படி என்று அட்வகேட்டா இன்ஸ்டிடியூட்டின் தலைமை நிர்வாக அதிகாரி தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“சுற்றுலாத்துறை என்பது உடனடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பொருளாதாரத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சில துறைகளில் ஒன்றாகும். நுழைவுக்கான தடைகளைக் குறைப்பது, ஒரு சிறிய கட்டண தள்ளுபடி கூட, இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றுவதில் நீண்ட தூரம் செல்லும்” என்றும் அவர் கூறினார்.

இலங்கை தற்போது மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகையையும், 5 பில்லியன் டொலர் வருவாயையும் ஈட்ட இலக்கு வைத்துள்ளது. அட்வகேட்டா இன்ஸ்டிடியூட், திறந்த, தெளிவான மற்றும் நிலையான விசா கொள்கைகள், வரவேற்கத்தக்க சூழல், முதலீட்டாளர்களுக்கு உகந்த ஒழுங்குமுறைகள் மற்றும் அதிக மதிப்புள்ள இலக்குகளைக் கொண்டிருப்பது போன்ற நடவடிக்கைகள் இந்த இலக்கை அடைய உதவும் என்று நம்புகிறது.

Recommended For You

About the Author: admin