களுத்துறை பிரதேச சபை ஊழியர்களின் சம்பளத்தில் சுமார் மூன்று கோடி ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சம்பள எழுத்தர் ஒருவரும், சாரதி ஒருவரும் களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண், 45 வயதான களுத்துறை, போமுவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சாரதி, 54 வயதான வடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வருடங்களாக மாதாந்தம் மூன்று முதல் நான்கு லட்சம் ரூபா வரையான தொகையை இந்தச் சந்தேகநபர் தனது மற்றும் சாரதியின் வங்கிக் கணக்குகளுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் வரவு வைத்துள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த மோசடி அம்பலமானதையடுத்து, இரண்டு சந்தேகநபர்களும் நிறுவன மட்டத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், களுத்துறை பிரதேச சபையின் செயலாளர் எரங்க தேசபுரவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட விசாரணைகளின் பின்னரே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

