யாழ்ப்பாணத்தின் மோசமான கழிவு முகாமைத்துவம் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அச்சுறுத்தல்: பேராசிரியர் கஜபதி எச்சரிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு (biodiversity) மோசமான கழிவு முகாமைத்துவம் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் கனகபதிப்பிள்ளை கஜபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், சரசாலை பறவைகள் சரணாலயம், நாகர்கோவில் மற்றும் அரியாலை போன்ற முக்கிய சூழலியல் வலயங்களில் அரிய வகை வலசைபோகும் பறவைகள் காணப்படுகின்றன. ஆனால், தற்போது இந்த இடங்கள் முறையற்ற கழிவு அகற்றுதல் மற்றும் போதிய கழிவு முகாமைத்துவம் இல்லாத காரணத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
நகரமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத்தரம் உயர்வு மற்றும் சனத்தொகை அதிகரிப்பு ஆகியவற்றினால் கழிவு அகற்றுதல் ஒரு பாரிய சவாலாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இருந்தபோதிலும், இந்த சவாலைத் தீர்க்க உரிய கழிவு முகாமைத்துவக் கட்டமைப்பு இப்பகுதியில் இல்லை.
“மாவட்டம் முழுவதும் கழிவுகள் வீதிகளில் கொட்டப்பட்டு, திறந்த வெளியில் எரிக்கப்படுகின்றன. இது சுகாதாரமற்றது மட்டுமல்ல, சட்டவிரோதமானதுமாகும்” என அவர் வலியுறுத்தினார்.
கடலோரப் பகுதிகளிலும், அடர்ந்த புதர்நிலங்களிலும், கைவிடப்பட்ட கழிவுகள் உணவு தேடி வரும் விலங்குகள் மற்றும் பறவைகளை ஈர்க்கின்றன. இந்த விலங்குகளில் பல தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருட்களை உட்கொண்டு, கடுமையான உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகின்றன.
நெடுந்தீவில் (Delft Island) அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டி, பல குதிரைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றின் வயிற்றில் பொலித்தீன் பைகள் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
முறையான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாமல் மேற்கொள்ளப்படும் கழிவு அகற்றும் நடைமுறைகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, சூழலியல் அமைப்பில் உள்ள மற்ற உயிரினங்களுக்கும் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகின்றன என அவர் மேலும் வலியுறுத்தினார்.
சரியான மற்றும் முறையான கழிவு முகாமைத்துவக் கொள்கைகள் உடனடியாக அமுல்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டம் ஒரு பாரிய சூழலியல் பேரழிவை எதிர்கொள்ளும் ஆபத்தில் உள்ளது என பேராசிரியர் கஜபதி எச்சரித்தார்.

