பிரான்சில் இணையத்தின் வழியாக விற்கப்படும் புதிய வகை செயற்கை போதைப்பொருட்களால் கோமா மற்றும் மரணம் உள்ளிட்ட கொடிய விளைவுகள் ஏற்படுவதாகப் பிரான்சின் தேசிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் பாதுகாப்பு நிறுவனம் (ANSM) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மருந்துகளின் பயன்பாடு தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதாகவும், புதிய வகை போலி மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
“செயற்கை பென்சோடியாசெபைன்கள் (benzodiazepines) தொடர்பான புகார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், இந்த வகையைச் சேர்ந்த புதிய மூலக்கூறுகளை கொடாத மருந்துகள் பிரான்சில் புழக்கத்தில் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது,” என்று ANSM தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மருந்துகள் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பென்சோடியாசெபைன் வகை மருந்துகளைப் போலவே இருந்தாலும், அவற்றின் விளைவுகளைப் பன்மடங்கு அதிகரிக்கும் நோக்கில் வேதியியல் மாற்றம் செய்யப்பட்டவை.
இவை இணையத்தில் எளிதாகக் கிடைக்கின்றன. “கவலையைக் குறைக்கவும், மயக்கமூட்டியாகவும் அல்லது மற்ற போதைப்பொருட்களுடன் கலந்தும்” இவை பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், இவற்றால் ஏற்படும் அபாயங்கள் மிக அதிகம் என ANSM எச்சரிக்கிறது.
“இந்த செயற்கை பென்சோடியாசெபைன்களின் அதீத சக்தி காரணமாக, மிகக் குறைந்த அளவில் உட்கொண்டால் கூட, கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அவற்றில் சில:
கடும் மயக்கம் (கோமா நிலை வரை செல்லலாம்)
குழப்பமான மனநிலை மற்றும் கிளர்ச்சி
நினைவாற்றல் இழப்பு
உடல் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பில் சிக்கல்கள்
சுவாசப் பிரச்சனைகள்”
“இந்த பக்கவிளைவுகள் பல நாட்கள் வரை நீடிக்கக்கூடும். மேலும், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகப்படியான அளவு (overdose) உட்கொள்ளும் அபாயமும் மிக அதிகம்,” என்று ANSM வலியுறுத்துகிறது.
சட்டரீதியாக இந்த தயாரிப்புகள் பிரான்சில் தடை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், ANSM நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உளவியல் மருந்துகள் (psychotropes) பட்டியலில் இல்லாத புதிய மூலக்கூறுகளைப் பயன்படுத்தி இவை உருவாக்கப்படுவதால், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுகின்றன.
இந்தச் சிக்கலைச் சமாளிக்க, ANSM தற்போது புதிதாக 9 மூலக்கூறுகளைக் கண்டறிந்து, அவற்றைத் தடை செய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் சேர்க்க உள்ளது. இந்த அறிவிப்பின்படி, நேற்று வியாழக்கிழமை முதல் அவற்றின் உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவை வெளிப்படையாகத் தடை செய்யப்படும்.
தடை செய்யப்பட்ட 9 மருந்துகளின் பட்டியல் பின்வருமாறு:
பென்டாசெபாம் (bentazépam)
புரோமோநோர்டையசெபாம் (bromonordiazépam)
ஃபுளூபுரோடிசோலாம் (flubrotizolam)
ஃபுளூகுளோடிசோலாம் (fluclotizolam)
கிடாசெபாம் (gidazépam)
மெத்தில்குளோனசெபாம் (méthylclonazépam)
நோர்புளூரசெபாம் (norflurazépam)
தியோநோர்டசெபாம் (thionordazépam)
டோஃபிசோபாம் (tofisopam)
அவசர உதவிக்கான அறிவுறுத்தல்
“நீங்களோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களோ, ‘டிசைனர் பென்சோ’ அல்லது D-BZD எனப்படும் இந்த செயற்கை போதைப்பொருளை உட்கொண்ட பிறகு ஏதேனும் பக்க விளைவுகளை உணர்ந்தால், உடனடியாக ‘சாமு’ (Samu – பிரான்சின் அவசர மருத்துவ சேவை) எண்ணை அழையுங்கள்,” என்று ANSM பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது

