உழைத்து உழைத்து உருக்குலைந்து போன மக்களை மேல் எழும்பவிடாமல் தடுக்கும் கருவிகளே கடவுளும் மதமும்..! லெனின்
அந்த வகையில் லெனினை பின்பற்றுவதாக கூறும் ஜனாதிபதி அனுராவும் அவரது ஜேவிபி கட்சியினரும் உழைக்கும் மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும் கருவிகளான கடவுளையும் மதத்தையும் எதிர்ப்பவர்களாக இருக்க வேண்டும்.
ஆனால் இன்று அனுராவும் அவரது கட்சியினரும் பௌத்த மத பீடத்திற்கு கொடுக்கும் மதிப்பையும் முக்கியத்தவத்தையும் பார்க்கையில் அவர்கள் லெனினை கைவிட்டுவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
இலங்கையில் பௌத்த மத பீடத்தினர் ஆட்சி செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் யார் ஆட்சி செய்தாலும் அவர்களின் ஆசீர்வாதமும் அனுமதியும் இன்றி எதுவும் செய்ய முடியாது.
இலங்கையில் சட்டப்படி மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி கையில்தான் அதிகாரம் இருக்க வேண்டும்.
ஆனால் நடைமுறையில் மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியைவிட மகாநாயக்க தேரர்களிடமே அதிக அதிகாரம் இருப்பதாக தோன்றுகிறது.
இந்த நடைமுறையை கடவுள் மற்றும் மத நம்பிக்கையற்ற மார்க்சிசவாதியான அனுரா மாற்றியமைப்பார்என்றே அனைவரும் நம்பினார்கள்.
ஆனால் அவரும் மற்ற ஜனாதிபதிகள்போல் தமது பதவியைக் காப்பாற்ற பௌத்த மத பீடத்தினருக்கு இடம் அளிக்கின்றாரோ என சந்தேகம் ஏற்படுகின்றது.
இது குறித்து அவரது கட்சியினரிடம் கேட்டபோது “பௌத்த மத பீடத்தினருக்குரிய மரியாதையை மட்டுமே அனுரா அளிக்கிறார். மற்றும்படி பௌத்த மத பீடத்தினரின் சொல் கேட்டு அவர் நடக்கவில்லை” என்று கூறுகின்றனர்.
இதற்கு உதாரணமாக பௌத்த மத பீடத்தினர் எவ்வளவோ வற்புறுத்தியும் மகிந்தாவின் மனைவி மற்றும் குடும்பம் மீதான நடவடிக்கை நிறுத்தப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.
இது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ஜனாதிபதி அனுரா பௌத்த மத பீடத்தினரை அடக்குவாரா அல்லது மற்றவர்கள் போல் இவரும் அடங்கிப் போவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

