பிரான்சின் குடும்ப நல நிதி ஆணையம் (CAF), ஆண்டுக்கு 900 யூரோக்கள் வரை வழங்கக்கூடிய ஒரு புதிய உதவித்தொகையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த உதவித்தொகை எந்தெந்த குடும்பங்களுக்குக் கிடைக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை, இந்த உதவித்தொகை பெரிய குடும்பங்களுக்கு (familles nombreuses) மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
அதாவது, ஒரு குடும்பத்தில் இரண்டாவது குழந்தையிலிருந்து இந்தத் தொகை அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால், இந்த விதியில் தற்போது முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.
புதிய திட்டத்தின்படி, குடும்பங்கள் தங்கள் முதல் குழந்தைக்கே இந்த உதவித்தொகையைப் பெற முடியும். ஏற்கனவே இந்த உதவித்தொகையைப் பெற்று வருபவர்களுக்கும் இது கூடுதல் பலனை அளிக்கும் என்றும், அவர்கள் பெறும் மொத்தத் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் ‘Le journal de l’Economie’ (பொருளாதார நாளிதழ்) குறிப்பிட்டுள்ளது.
இந்த உதவித்தொகையானது, ஒரு குடும்பத்தின் வருமானத்தைப் பொறுத்து, மாதத்திற்கு 19 முதல் 75 யூரோக்கள் வரை (ஆண்டுக்கு 900 யூரோக்கள் வரை) மாறுபடும்.
ஒரு குடும்பத்தில் முதல் குழந்தையின் வருகையை வரவேற்பதே இந்த புதிய உதவித்தொகையின் முக்கிய நோக்கமாகும். தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, பிரான்சில் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களில் ஒரே ஒரு குழந்தை மட்டுமே உள்ளது. இருப்பினும், அவர்களில் பலர் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
அத்துடன் , இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு நிதிச்சுமையே முக்கியத் தடையாக இருப்பதாகப் பல குடும்பங்கள் குறிப்பிடுகின்றன. எனவே, இந்த உதவித்தொகை, குடும்பங்களை இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதுடன், தம்பதியினர் தங்களின் முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை முன்கூட்டியே பரிசீலிக்கவும் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம், பிரான்சின் தேசிய சட்டமன்றத்தில் 103 உறுப்பினர்கள் இந்தப் புதிய உதவித்தொகைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்தப் புதிய திட்டத்தால் அரசுக்கு 3 பில்லியன் யூரோக்கள் வரை செலவாகும் என்பதால், ஆளும் தரப்பில் சில எதிர்ப்புகள் இருந்தபோதிலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
தற்போது, இந்த மசோதா செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இந்தத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், செனட் சபையிலும் இது ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

