மூளை வளர்ச்சியில் வீடும் முன்பள்ளியும் அதீத செல்வாக்கு செலுத்துகின்றன..!
மேற்பார்வை சுகாதார பரிசோதகர்
றினாறொனால்ட்
மூளைவளர்சியில் அதிக செல்வாக்குச் செலுத்துவதில்
வீடும் முன்பள்ளியுமே முக்கியமானவை என பூநகரிப் பிரதேச
மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
முழங்காவில் டொன்பொஸ்க்கோ முன்பள்ளி மாணவர்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தமர்வொன்றின் போதே வளவாளராக கலந்துகொண்டு அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
மனிதனின் மூளை வளர்ச்சியின் தொண்ணூறு சதவிகித அளவு பிறந்ததிலிருந்து ஆறு வயதுகளுக்குள் நடைபெற்று முடிந்துவிடுகிறது. இது தரமான நரம்பிணைப்புகள் ஏற்பட்டு மூளைக் கொள்ளளவு அதிகரிக்கும் காலமாதலால் வீடும்- முன்பள்ளிகளும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.
வீட்டிலும், முன்பள்ளியிலும் பிள்ளைகளின் தனிநபர் மற்றும் சமூகத் திறன்களை வளர்க்கக்கூடியவாறு பிள்ளைகளைத் தூண்டி செயற்பட இடமளிக்கவேண்டும்.
விரல்களைத் தூண்டும் சிறுவிளையாட்டுக்கள் செயற்பாடுகளுக்கு இடமளித்தல், தன்னை அறிமுகம் செய்யும் திறனை வளர்த்தல், சுயசுத்தம் பேணல், தனது வேலைகளைத் தானேசெய்தல், புதிய நபர்கள் மற்றும் சூழலை எதிர் கொள்ளல், துஷ்பியோகங்களுக்கு உள்ளாகாதிருத்தல் போன்ற திறன்களை வளர்ப்பதிலேயே அதிக கவனஞ்செலுத்த வேண்டும்.
இந்த வயதில் கல்வியை விளையாட்டுக்கள், பாடல்கள் மற்றும் பிடித்த செயற்பாடுகளூடாகவே ஊட்ட வேண்டும். கல்வியை திணிப்பதனூடாகவும் ,பரீட்சைகள் ஊடாகவும் ஏற்படுத்தக்கூடாது.
பெற்றோர், ஆசிரியர்கள் பிள்ளைகளை கண்காணிப்போடு சுயாதீனமாக இயங்கக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தவேண்டும்.
தண்டனைகளும், அவமானப்படுத்தும் பேச்சுக்களும் அவர்களது வளர்ச்சியைச் சிதைத்துவிடும்.
வயதுக்கேற்ற உயரம், நிறையைப்பேணுதல். நிர்ப்பீடனங்களைப் பெற்றுக்கொடுத்தல், வளர்ச்சிப்படி நிலைகளை அவதானித்து மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை பொருத்தமான நிலைகளில் பெறுவதும் அவசியமாகும்.
எனவே சிறந்தபோசாக்கும், விளையாட்டும், விளையாட்டுக்களூடான கல்வியும், பாராட்டுதல்களும் ,பெற்றோர் ஆசிரியர்களது முன்மாதிரியான நடத்தைகளுமே பிள்ளைகளை சிறந்த ஆளுமையுடயவர்களாக வளர்க்க உதவும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

