செம்மணியும் கடந்து போகமுடியாத துயரங்களும்..!
செம்மணி “அணையா விளக்கு” அமைதிப் பேரணிக்கு காலையில் சென்றிருந்தேன்.என் மனதில் இருந்ததெல்லாம்
கடந்த காலங்களைப்போலவே இன்றும் ஒரு மகஜர் கையளிப்பு.தீர்வு என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் என்னால் முடிந்த பங்களிப்பை செய்துவிட்டுவருவோம் என்று நினைத்தேன்.
“செம்மணி படுகொலை”என்றாலே கிருசாந்தி மட்டுமே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்றுதான் பலரும் எண்ணுவார்கள்.பலருக்கு தெரிந்திருப்பதும் கிருசாந்தி படுகொலைதான்.
அதிகமானோரின் எண்ணத்தில் 1996 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆண்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு காணாமல் போனார்கள் என்றே நினைப்பதுண்டு.
இவ்வகையில் பேரணியில் கலந்து கொண்டோரில் அதிகமானோர் தமது உறவுகள் 1996 இல்தான் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறிக்கொண்டிருந்தார்கள்.
எனக்கு பின்பகுதியில் இருந்த வயதான தாயார் ஒருவர் தனது மகளை தன்னுடைய வயதான தாய்,தந்தையருடன்(அம்மம்மா,அம்மப்பாவுடன்)இருந்து படிக்கும்படி கூறிவிட்டு
தனது குடும்பப் பொருளாதார சுமையைப் போக்க வேலைக்கு சென்றபோது வீட்டில் நின்ற தனது மகளை இராணுவத்தினர் தங்களது இராணுவ முகாம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததன் பின்னர் விடுவித்திருந்ததாகவும்
அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் இராணுவ முகாமிற்குச் சென்று கையொப்பமிட்டு வந்த மாணவியான தனது மகளை வெள்ளை வானில் வந்தவர்கள் மீண்டும் வீட்டில் வைத்து கடத்தி சென்றதால் காணாமல் போய்விட்டார் என்றும்
1996 இல் கைது செய்யப்பட்ட தனது மகளிற்கு 2025 வரை என்ன நடந்தது என்று தெரியாமல் இருப்பதாகவும் தனக்கும் வயதாகி விட்டதால் தான் இறந்துவிட்டால் காணாமல் போன தனது மகளைத்தேடி இனி யாரும் வரமாட்டார்கள் என்று கூறி அழுதார்.
சில வார்த்தைகள் மீளமுடியாத அதிக வலியை தந்துவிடும்.இந்த அம்மாவின் வலிமிகு வார்த்தைகள் வேதனையையே தந்தது.
கிருசாந்தியைப்போலவே இந்த அம்மாவின் மகளான மாணவியும் கடத்தப்பட்டு காணாமல் போனார்.
அதேபோல் இன்னொரு தங்கை 2000 ஆண்டு உதயன் பத்திரிகையில் வந்த செய்தியை மட்டை ஒன்றில் ஒட்டியபடி கொண்டுவந்திருந்தார்,
தங்கள் நெருங்கிய உறவினரான பெண்ணும் கணவரும் அரியாலை நெடுங்குளம் பகுதியில் வீட்டில் இருந்தவேளை இரவு நேரம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனதாக கூறினார்.
முகமூடி அணிந்து சீருடையில் வந்த இராணுவத்தினர் சுரேஸ் சுமதி தம்பதிகளை முகாம் வருமாறு அழைத்தபோது தங்களது இரு சிறுவர்களையும் அயலில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பாக விட்டுவிட்டே சென்றுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட இளம் தம்பதிகள் இருவரையும் கொலை செய்து ஒரே புதைகுழியில் புதைத்துவிட்டனர்.
இருவரையும் அழைத்துச் சென்றதை கண்கண்ட சாட்சிகள் ஊடாக நடந்த சம்பவம் விசாரிக்கப்பட்டதில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.சில மாதங்களின் பின்னர் இராணுவ கோப்ரல் சோமரட்ண ராஜபக்க்ஷ அவர்கள் தம்பதிகளை கைது செய்ததன் பின்னர் பல இராணுவத்தினரும் இணைந்து புதைக்கும்வரை என்னென்ன கொடுமைகள் செய்தார்கள் என்பதைக்கூறி அதிர்ச்சி தகவல் வெளியிட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவில் தோண்டப்பட்ட புதைகுழியில் இருவரின் உடல்களோடு இருந்த ஆடைகளும் பெண் அணிந்திருந்த மூக்குத்தி,மெட்டி என்பனவற்றை பெண்ணின் தாயார் அடையாளம் கண்டு பிடித்ததோடு பிள்ளைகளின் இரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டு உடல்கள் காணாமல்போன சிறுவர்களின் பெற்றோர் என உறுதிப்படுத்தப்பட்டனர்.
அன்று அயல் வீட்டில் சிறுவர்களை விட்டிட்டு சென்றபடியால் இரு சிறுவர்களும் உயிரோடு தப்பித்துக்கொண்டார்கள்.அல்லாது பெற்றோரோடு சென்றிருப்பார்களேயானால் பிள்ளைகளும் கொலையுண்டிருப்பார்கள்.
ஆதாரத்தின் மேல் ஆதாரங்களை நாம் எங்கு சென்று கொடுத்தாலும் அன்றில் இருந்து இன்றுவரை எமக்கு மிஞ்சுவது கவலைகள் மட்டுமே.
எங்கு சென்றாலும் இந்த காணாமல் போதல்களையும் படுகொலைகளையுமே கேட்ட முடிகிறது.
“அழக்கூடாதவற்றிற்கு அழுதவதும் அழவேண்டியவற்றிற்கு அழாமல் இருப்பதுமாக மனம் மரத்துப்போய் கிடக்கிறது”
நன்றி
பிரபா அன்பு


