திருகோணமலை மாநகரசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழரசுக் கட்சி 13 மேலதிக வாக்குகளால் கைப்பற்றியுள்ளதுடன் மேயராக கந்தசாமி செல்வராஜா, பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நெய்னா முகம்மது மஹ்சூம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாநகரசபையின் தவிசாளர் தெரிவிற்கான அமர்வு இன்று திங்கட்கிழமை (23) மதியம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்றது. இதன்போது மேயர் பதவிக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி கந்தசாமி செல்வராஜா என்பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரல் முன்மொழிந்தது.
அதேநேரம் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கே.பி.ஜே.தனுஷ்க ஜெயலத் என்பவரை அதே கட்சி முன் மொழிந்திருந்தது.
இந்நிலையில் குறித்த தெரிவு பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது தமிழரசுக்கட்சி உறுப்பினர் கந்தசாமி செல்வராஜாவுக்கு ஆதரவாக தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் 9பேர், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் 4 பேர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 3பேர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் 1, சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 2 பேர் உட்பட 19 பேர் வாக்களித்திருந்தனர். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்
கே.பி.ஜே.தனுஷ்க ஜெயலத் என்பவருக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 6 பேர் வாக்களித்தனர்.
அந்தவகையில் 13 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா மேயராக தெரிவு செய்யப்பட்டதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நெய்னா முகம்மது மஹ்சூம் பிரதி மேயராக ஏகமனமாக தெரிவு செய்யப்பட்டார்


