இந்து மதகுரு மீது தாக்குதல்-அருட்கலாநிதி றமேஷ் அமதி அடிகளார் கண்டனம்

இன்று (7)கனகாம்பிகை குளத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தில் குடும்ப மீளாய்வு நோக்கத்திற்காக சென்றிருந்த சிவசிறி சிவகுமாரன் குருக்கள் அப்பகுதியில் வசித்துவரும் நபர் ஒருவரினால் தாக்கப்பட்டு அவர் அணிந்திருந்த மாலையும் அறுத்தெறியப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் காயப்பட்ட மதகுருவானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முருகன் வீதி  கனகாம்பிகை குளம் கிளிநொச்சியில் வசித்துவரும் சிவசிறி சிவகுமாரன் குருக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக அருட் கலாநிதி றமேஸ் அமதி அடிகளார் தெரிவித்துள்ளார்.

இக்காலத்தில் மதகுருக்கள் பலவாறு அவமதிக்கப்படுவதையும், தாக்கப்படுவதையும் நாம் காண்கிறோம். உயர் கலாசார மற்றும் பாரம்பரிய ஒழுக்க விழுமியங்கள் கட்டிக்காக்கப்படும் கிளிநொச்சி மண்ணில் நடந்த இந்த அநாகரிக செயலுக்கு கிளிநொச்சி சர்வமத தலைவர்கள் சார்பில் கவலை தெரிவித்த கத்தோலிக்க திருச்சபையின் அமலமரித்தியாகிகளின் நீதி சமாதான ஆணைக்குழுவின் இணைப்பாளர் அருட் கலாநிதி றமேஸ் அமதி அடிகளார் இத்தகைய செயற்பாடுகள் இனியும் இடம்பெறா வண்ணம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான மதகுரு அவர்கள் சுகம் பெறவும் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட மனக் காயங்கள் தீரவும் தாம் இறைவனை பிராத்திப்பதாகவும் பாதிக்கப்பட்ட மதகுருவுக்கு நீதி கிடைக்க கிளிநொச்சி வாழ் மதகுருக்கள் அனைவரும் அவருடன் கரம் கோர்த்து நிற்போம் என்றும் அருட்தந்தை அவர்கள் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin