சீதுவ துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல்கள் வெளியாகின

சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், 53 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சீதுவ, லியனகேமுல்ல, வெலபடபார பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில், இன்று (28) மாலை 5:45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அவர்கள் படுகாயமடைந்த நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்தக் குடும்பத்தின் மூத்த மகன் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 73 வயதான வர்த்தகர், தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது மற்றைய மகன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கிதாரிகள், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்த காரை, கட்டுநாயக்க – கோவின்ன பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு அருகில் வைத்து, எரித்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியே துப்பாக்கிதாரிகள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Recommended For You

About the Author: admin