முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்கார பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்லாந்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 40 இலட்சம் பணம் கோரி, அதில் ரூ. 30 இலட்சத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பில் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, நிதி மோசடி தொடர்பான முறைப்பாடு தொடர்பில் திசர நாணயக்கார பிபில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
சந்தேகநபர் இதற்கு முன்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கடந்த 2018 டிசம்பர் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.