மன்னார் மாவட்ட மக்கள் குப்பைகளை அகற்ற வழியின்றி பாரிய சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர்,அருட்பணி மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இன்று (28.12) சனிக்கிழமை காலை மன்னார் மாந்தைப் பகுதியில் அமைந்துள்ள கழிவுகள் கொட்டும் இடத்திற்குப் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர்,
மன்னார் நகர சபையின் அதிகாரத்துக்கு கீழ் இயங்கி வந்த கழிவுகள் கொட்டும் இடமானது. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக. அந்த இடத்திலே நிர்வாகம் செய்வதற்கான தடைகள் விதிக்கப்பட்டு,அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நடைபெற்ற சில சட்ட விரோதமான செயற்பாடுகள் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.அதனால் மன்னார் மாவட்டத்தில் தீவுப் பகுதி மற்றும் வெளியே உள்ள மக்கள், கழிவுகளை அகற்ற வழியில்லாத நிலையில் சொல்லொனாத் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசி,இந்த இடத்தில் மீண்டும் கழிவுகளைப் போட முடியுமா என்பது தொடர்பில் கலந்துரையாடி,
இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வினை எட்ட வேண்டும் என்னும் நல்ல நோக்குடன்.மன்னார் பிரஜைகள் குழுவினராகிய நாங்கள் இந்த இடத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம். இது தொடர்பாக உரிய தரப்பினருடன் பேசி, விரைவில், மக்கள் எதிர் நோக்கியுள்ள இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வினை எட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.