இந்தியா – பாகிஸ்தான் பெப்ரவரி 23 இல் டுபாயில் பலப்பரீட்சை
இழுபறி நீடித்த சம்பியன்ஸ் கிண்ண தொடரின் போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் குழு நிலைப் போட்டி டுபாயில் பெப்ரவரி 23 ஆம் திகதி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் பொதுவான மைதானமாக டுபாயில் 2025 பெப்ரவரி 19 தொடக்கம் மார்ச் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நடப்புச் சம்பியன் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஏ குழுவில் இடம்பெற்றிருப்பதோடு இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பி குழுவில் இடம்பெற்றுள்ளன.
தொடரின் ஆரம்பப் போட்டிகளாக பெப்ரவரி 19 இல் கராச்சியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துடன் மோதவிருப்பதோடு அடுத்த தினத்தில் (20) டுபாயில் இந்திய அணி பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்ததை அடுத்து போட்டியை நடத்துவதற்கான பொதுவான இடமாக டுபாயை பாக். கிரிக்கெட் சபை தேர்வு செய்தது.
இதனால் இந்தியாவின் மூன்று குழுநிலை போட்டிகள் மற்றும் மார்ச் 4 ஆம் திகதி முதல் அரையிறுதி போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும். இறுதிப் போட்டி லாகூரில் மார்ச் 9 ஆம் திகதி நடத்த ஏற்பாடானபோதும், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் அந்த ஆட்டம் டுபாய்க்கு மாற்றப்படும்.
கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் முதல் எட்டு அணிகளுக்குள் முன்னேறத் தவறியதால் சம்பியன் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணியால் தகுதி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1996 உலகக் கிண்ணத்திற்கு பின்னர் ஐ.சி.சி. நடத்தும் பிரதான கிரிக்கெட் தொடர் ஒன்று பாகிஸ்தானில் இடம்பெறுவது இது முதல் முறையாக அமையவுள்ளது. 2028 மகளிர் டி20 உலகக் கிண்ணத்தையும் பாகிஸ்தான் அணி நடத்தவிருப்பதோடு அதில் இந்திய போட்டிகள் பொதுவான மைதானத்தில் நடத்தப்படவுள்ளன.
இது தொடர்பில் எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி 2027 வரை இந்தியாவினால் நடத்தப்படும் போட்டிகளில் பாகிஸ்தானின் ஆட்டங்கள் பொதுவான மைதானத்தில் இடம்பெறும்.
2013 தொடக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெரும்பாலும் பொதுவான மைதானங்களிலேயே பலப்பரீட்சை நடத்துவதோடு 2008 தொடக்கம் இந்தியா பாகிஸ்தானில் ஆடியதில்லை