அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் முன்னோடி பாக்கர் சூரிய விண்கலம் சூரியனுக்கு மிக நெருக்கமாக அதன் மேற்பரப்பில் இருந்து 3.8 மில்லியன் மைல் (6.2 மில்லியன் கிலோமீற்றர்) நெருங்கியுள்ளது.
2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விண்கலம் கடந்த ஏழு ஆண்டுகளாக சூரியன் தொடர்பான ஆய்வுகள் மற்றும் பூமியை பாதிக்கும் விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அந்த விண்கலம் நேற்று (24) சூரியனை மிக நெருக்கமாக பயணித்தது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான இடைவெளி அமெரிக்க கால்பந்து மைதானம் அளவு இருக்கும் பட்சத்தில் பாக்கர் சூரிய விண்கலம் அபாயகரமான அளவுக்கு நான்கு மீற்றர்கள் அளவு சூரியனை நெருங்குகிறது.
இந்த விண்கலம் சூரியனின் நெருங்கிய புள்ளியை அடையும்போது அதனுடன் நாசா விஞ்ஞானிகள் நேரடி தொடர்பை ஏற்படுத்தவுள்ளனர். அந்த விண்கலத்தின் நிலை குறித்து நாளையே (26) அறிய முடியுமாக இருக்கும்.
விண்கலத்தின் வெளிப்புறம் சூரியனின் தகிக்கும் வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு இருக்கும்வேளையில் அதன் உட்புறம் அறையின் வெப்பநிலையில் இருக்கும். அது அதிவேகத்தில் சூரியனைச் சுற்றிவரும் என்று நாசா கூறியது. மனிதப் படைப்புகளில் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் முதல் விண்கலம் இதுவாக அமையும்.