அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஊடகங்களுடனான நேர்காணல்களுக்கு கட்சியின் அனுமதி தேவையெனக் கூறி, நீதி அமைச்சர் நேர்காணலை நிராகரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் இவ்வாறான தடை எதவுமில்லை. அவர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் உண்டு.
இருப்பினும், இதற்கான செயல்முறை நெறிப்படுத்தப்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.
நாம் ஒரு நடைமுறையைப் பின்பற்றுகிறோம். அமைச்சரவை முடிவுகளை தெரிவிப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். அதேவேளையில் அமைச்சர்கள் தங்களுக்குரிய அமைச்சுக்கள் குறித்த விடயங்களை தெரிவிப்பர்.
அதற்கு எந்த தடையும் இல்லை. ஏதேனும் இருந்தால், அது நேரக் கட்டுப்பாடுடன் தொடர்புபட்ட விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.