அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக் கூடாது – எதிர்காலத்தில் 3 இடங்களில் புதிதாக அரிசி ஆலையை அமைக்க திட்டம்
அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டமை எல்லோருக்கும் தெரியும். அவ்வாறான நிலைமை தொடரக்கூடாது என கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இருவரதும் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (21) வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டமை எல்லோருக்கும் தெரியும். அவ்வாறான நிலைமை தொடரக்கூடாது என்பதில் அரசாங்கம் கவனத்துடன் இருக்கிறது.
அரிசி ஆலை உரிமையாளர்களான உங்களை நஷ்டத்தில் வீழ்த்துவதையோ, மக்களை கஷ்டத்தில் வீழ்த்துவதையோ விரும்பவில்லை.
அரசாங்கம் எதிர்காலத்தில் 3 இடங்களில் புதிதாக அரிசி ஆலையை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
கடந்த காலங்களில் நெல்லைக் கொள்வனவு செய்தபோது நீங்கள் அதை அரிசியாக்கும்போது நிர்ணயமாகும் விலையை விட தற்போது அதிக விலைக்கே விற்பனை செய்கின்றீர்கள்.
அரிசி ஆலை உரிமையாளர்களை பழிவாங்குவதாக நினைக்க வேண்டாம். அதிகமான ஏழைகள் வாழும் மாகாணம் எமது மாகாணம் என்பதைக் கவனத்தில் எடுத்து சமூகப்பொறுப்புடன் செயற்படுமாறும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.