கிரீன்லாந்தை ஆக்கிரமித்தால் போர் மூளும் – டென்மார்க் எச்சரிக்கை!
கிரீன்லாந்தை (Greenland) இராணுவ ரீதியாக ஆக்கிரமிக்க உத்தரவிட்டால் போர் மூளும் என்று டென்மார்க் (Denmark) நாடாளுமன்ற உறுப்பினர் ராஸ்மஸ் ஜார்லோவ் (Rasmus Jarlov) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கிரீன்லாந்தை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு (CNN) அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
நாங்கள் கிரீன்லாந்தை பாதுகாப்போம். அமெரிக்க துருப்புக்கள் படையெடுத்தால் அது போராக மாறும். அமெரிக்கர்கள் எங்களை விட வலிமையானவர்கள் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் எங்கள் நிலத்தையும் மக்களையும் பாதுகாப்பது எங்கள் கடமை. கிரீன்லாந்தில் வசிக்கும் 57,000 மக்கள் அமெரிக்காவிடம் செல்ல விரும்பவில்லை. அவர்களுக்காக நாங்கள் போராடுவோம் என்று ஜார்லோவ் கூறியுள்ளார்.
கிரீன்லாந்துக்கு சீனாவாலோ (China) அல்லது ரஷ்யாவாலோ (Russia) எந்த அச்சுறுத்தலும் இல்லை. நாங்கள் அவர்களை எங்கள் எல்லைகளுக்கு வெளியே வைத்திருக்கிறோம். கிரீன்லாந்துக்கு அமெரிக்காவுக்கு ஏற்கனவே அனுமதி உள்ளது. அதைவிடுத்து அவர்கள் ஏன் எங்களை ஆக்கிரமிக்க வேண்டும்? அதை ஆள நினைப்பதன் மூலம் செலவுகள் மட்டுமே அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டை நீங்கள் தான் ஆள வேண்டும் என்று கிரீன்லாந்து மக்கள் உங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். டென்மார்க் கொடுக்கும் பணத்தை எதிர்பார்க்காமல் நீங்களே எல்லாம் செய்யவேண்டியிருக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
டென்மார்க் கிரீன்லாந்தில் செயற்கைக்கோள்கள், துருப்புக்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு சுமார் 14 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
நாங்கள் நட்புரீதியாக எங்கள் கதவுகளை திறந்து வைத்துள்ளோம். ஏன் எங்களுடன் இணைந்து நீங்கள் பணியாற்றக்கூடாது? என்று ஜார்லோவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்கள் 250 ஆண்டுகளாக அமெரிக்காவின் நண்பர்களாக இருக்கிறோம். அமைதியான நட்பு நாடுகளை தாக்குவதும் மிரட்டுவதும் உங்கள் வழக்கம் இல்லை. நீங்கள் சுதந்திரத்திற்காக போராடும் நாடு. நட்பு நாடுகளை அடிமைப்படுத்துவதும், பிற நாடுகளின் நிலத்தை அபகரிப்பதும் உங்கள் வழக்கம் இல்லை. நீங்கள் உங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுகிறீர்கள். திடீரென நட்பு நாடுகளை கைவிட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகி கிரீன்லாந்து டென்மார்க்கிற்கு சொந்தமானது என்பதற்கு எந்த ஆவணமும் இல்லை என்று கூறுவது சரியல்ல என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் டென்மார்க் இராணுவம் கூடுதல் துருப்புக்களை கிரீன்லாந்துக்கு அனுப்பியுள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி துருப்புக்கள் கிரீன்லாந்துக்கு வந்து சேர்ந்தனர்.
இந்த துருப்புக்கள் ஜெர்மனி (Germany), ஸ்வீடன் (Sweden), நோர்வே (Norway), பிரான்ஸ் (France), பின்லாந்து (Finland), நெதர்லாந்து (Netherlands) மற்றும் பிரித்தானியா (Great Britain) போன்ற நாடுகளின் துருப்புக்களுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
2026 ஆம் ஆண்டில் கிரீன்லாந்தில் டென்மார்க்கின் இராணுவ பிரசன்னம் அதிகரிக்கும் என்று இராணுவம் அவர்களுடைய X தளத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
செய்தித் தகவல் மூலம் – டெய்லி எக்ஸ்பிரஸ்.
Source – Daily Express.

