“பிரித்தானிய நீதியை நம்பித்தான் வந்தேன், ஆனால்…” – புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரின் கண்ணீர் கதை!

“பிரித்தானிய நீதியை நம்பித்தான் வந்தேன், ஆனால்…” – புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரின் கண்ணீர் கதை!

நான் உயிரைப் பணயம் வைத்து சிறிய படகில் பிரிட்டனுக்கு (Britain) வந்தது பொறுப்பற்றதனாலோ அல்லது வேறு வழியில்லாதனாலோ அல்ல. சட்டப்பூர்வமான வழிகள் அனைத்தும் எனக்கு மூடப்பட்டதால்தான் அப்படி வந்தேன். என் சொந்த நாட்டில் நான் சந்தித்த ஆபத்து எனக்கு வாழ்வதற்கு வேறு வழியில்லை என்று நிரூபித்தது. ஆனால் இப்போது பிரிட்டன் அரசாங்கத்தின் கொள்கை என்னை மீண்டும் ஆபத்தில் தள்ளும் சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது என்று புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

 

என் சொந்த நாட்டில் எண்ணெய் வயலை (oilfield) நிர்வகிக்கும் வேலையில் இருந்தேன். நான் ஒரு தோல்வியடைந்தவள் அல்ல. நல்ல சம்பளம் அல்லது எளிதான வாழ்க்கைக்காக ஐரோப்பாவை நோக்கி ஓடவில்லை. அதிகாரம், ஊழல் மற்றும் அநீதியிலிருந்து தப்பி ஓடினேன்.

 

என்னுடைய சொந்தநாட்டில் சக்திவாய்ந்த செல்வாக்கு மிக்க ஒரு நபரால் நான் குறிவைக்கப்பட்டதால் தப்பி ஓட வேண்டியிருந்தது. அவர் என்னை அழிக்க முடிவு செய்தால் எனக்கு எந்த பாதுகாப்பும் கிடைக்கப்போவதும் இல்லை. எந்த நீதிமன்றத்தையும் நம்ப முடியாது. எதிர்காலமும் இல்லை. என் நாட்டை விட்டு சட்டப்பூர்வமாக வெளியேற பலமுறை முயன்றேன். ஆனால் எந்த நாடும் என் வழக்கை ஏற்கவில்லை. நிலைமை மிகவும் பாரதூரமானது. அங்கேயே இருந்திருந்தால் உயிருக்கு ஆபத்து நிச்சயம் ஏற்பட்டிருக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

 

முதலில் பிரான்சுக்குச் (France) சென்றேன். ஆனால் அங்கும் எனக்குப் பாதுகாப்பாக உணரவில்லை. நான் யாரிடமிருந்து தப்பி ஓடுகிறேனோ அவர் அங்கு என்னை இலகுவாக அடைய முடியும் என்று எனக்குத் தெரியும்.

 

பிரான்சில் கடத்தல்காரர்கள், ஆள்கடத்தல் கும்பல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் செய்பவர்களின் பலம் புகலிடம் தேடுபவர்களுக்கு நன்கு தெரியும். எனக்கு மிரட்டல்கள் வந்தன. என் குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வந்தன. நான் எப்போதும் பயத்துடனேயே வாழ்ந்தேன். அதனால்தான் என் வாழ்க்கையின் மிக ஆபத்தான முடிவை எடுத்தேன். சிறிய படகில் கால்வாயைக் கடக்க முடிவு செய்தேன். பிரான்சை விட்டு பிரிட்டனுக்குப் புறப்பட்ட பிறகு என் குடும்பத்திற்கு பிரெஞ்சு எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் நான் பிரான்சில் இருந்தபோது பிடிக்க முடியவில்லை. ஆனால் நான் அங்கு திரும்பி வந்தால் என்னை கட்டாயம் பிடித்துவிடுவார்கள் என்று மிரட்டினர்” என்று அவர் கூறியுள்ளார்.

 

பிரித்தானிய சட்டம் மற்றும் நீதியை நம்பித்தான் என் உயிரைப் பணயம் வைத்தேன். துன்புறுத்தலில் இருந்து தப்பி வரும் மக்களைப் பாதுகாக்கும் நீண்ட வரலாற்றை நான் நம்பினேன். எல்லைப் பாதுகாப்புப் படகில் (Border Force boat) பிரிட்டன் கொடியைப் பார்த்தபோது அதுதான் இரட்சிப்பிற்கான தூதர்கள் என்று நம்பினேன். துன்பம் முடிந்துவிட்டது என்றும் நீண்ட பயணம் மற்றும் அச்சுறுத்தலின் கீழ் வாழ்ந்த ஆண்டுகள் முடிவுக்கு வந்துவிட்டன என்றும் நினைத்தேன்”

 

ஆனால் நான் நினைத்தது தவறு. ஓய்வெடுக்கவோ மனதளவிலும், உடலளவிலும் தேறுவதற்க்கோ எங்களுக்கு நேரம் கொடுக்கப்படவில்லை. நேர்காணல் செய்யப்போகிறோம் என்று எங்களை அழைத்துச் சென்றார்கள். எங்கள் கதைகளை யாரும் கேட்கவில்லை. நாங்கள் யார் அல்லது எங்களுக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளக்கூட யாரும் முயற்சிக்கவில்லை. நேர்காணல் செய்த அதிகாரி என்னை ஏறெடுத்து பார்க்கக்கூடவில்லை. கணினி திரையில் மட்டுமே அவர் கவனம் இருந்தது என்று அவர் கண்ணீர்மல்க கூறினார்.

 

ஒவ்வொரு படகிலிருந்தும் ஒரு சிறிய சதவீத மக்கள் தடுத்து வைக்கும் மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் புலம்பெயர்ந்தோர் தங்கும் விடுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். நான் அதிர்ஷ்டம் இல்லாதவள். ஒரு தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு இடத்தைப் பார்ப்பது இதுவே முதல் முறை. நான் அதிர்ச்சியடைந்தேன். எங்கள் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றப் பதிவுகள் உள்ளவர்களுடன் நான் உள்ளே பூட்டப்பட்டேன். அந்த மையம் போதைப்பொருள் மற்றும் வன்முறைகள் நிறைந்தது. அப்பாவிகளை இதுபோன்ற சூழலில் வைப்பது மிகவும் ஆபத்தானது. நாங்கள் செய்த ஒரே “குற்றம்” புகலிடம் கேட்டது மட்டும் தான் என்று அவர் மேலும் கூறினார்.

 

சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்திற்கு வாய்ப்பு ஏதும் இருக்கவில்லை. வழக்கறிஞர் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கும் உள்துறை அலுவலகத்திற்கும் (Home Office) இடையிலான நியாயமற்ற போர் இது. இந்த தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்கு பலருக்கு செயல்முறை, மொழி அல்லது அவர்களின் உரிமைகள் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. மக்கள் பலவந்தமாக விமானங்களில் ஏற்றப்பட்டார்கள். அந்த சிறையின் ஒவ்வொரு மூலையிலும் பயம் நிறைந்திருந்தது. அமைதியான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டபோது அதற்கு மிருகத்தனமான முறையில் பதிலடி கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் நாய்களுடனும் கண்ணீர்ப்புகையுடனும் அனுப்பப்பட்டனர். இது பிரித்தானியாவில் நடக்கும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஏற்கனவே அதிர்ச்சியில் இருக்கும் மக்களுக்கு இந்த சிகிச்சை ஆழமான உளவியல் பாதிப்பை ஏற்படுத்தியது என்று அவர் தேம்பியழுதவாறு கூறியுள்ளார்.

 

நான் பிரித்தானிய அரசாங்கத்தின் “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே” கொள்கைக்கு உட்படுத்தப்பட்டேன். அதாவது சிறிய படகில் பிரித்தானியாவுக்கு வருபவர்களை பிரான்சுக்கு திருப்பி அனுப்ப முடியும். அதற்கு பதிலாக பிரான்சில் இருந்து அதே எண்ணிக்கையிலான அகதிகளை பிரித்தானியா சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளும்.

 

நான் பிரான்சுக்குத் திரும்ப வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது. ஆனால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த மிரட்டல்களை உள்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்தபோது உரிமம் பெற்ற மொழிபெயர்ப்பாளர் மூலம் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கப்படவில்லை என்றார்கள். இந்த காரணத்தை பயன்படுத்தி எனக்கிருந்த ஆபத்தை நிராகரித்தனர். ஆள் கடத்தல்காரர்களை கட்டுப்படுத்தாது ஒரு நாட்டை நான் எப்படி நம்புவது? பிரான்சுக்கு நாடு கடத்தப்படும் சில புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பல இடங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த பிரித்தானியா-பிரான்ஸ் ஒப்பந்தம் ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் இது ஒரு தீர்வு அல்ல. இது பிரான்சுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில் பிரான்சுக்கு அகதிகள் வருவதை தடுக்க பிரித்தானியா 2015 முதல் 800 மில்லியன் பவுண்டுகள் கொடுத்துள்ளது. இது பிரிட்டனுக்கு மேலதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. நியாயமற்ற நாடு என்ற நாட்டினுடைய நட்பெயரை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

 

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து என்னதான் மாறிவிட்டது? ஆகஸ்ட் 6, 2025 முதல் 16,000 க்கும் அதிகமானோர் கால்வாயைக் கடந்துள்ளனர். ஆனால் கடந்த வாரம் வரை 250 க்கும் குறைவானவர்களே பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளிலோ அல்லது தடுப்பு மையங்களிலோ சிக்கித் தவிக்கின்றனர். ஆள் கடத்தல்காரர்கள் இன்னும் செயல்படுகிறார்கள். கடத்தல்கள் நிற்கவில்லை. பிரான்ஸ் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரித்தானியாவுக்கு அவமானமும் என் போன்ற ஒரு சிறிய எண்ணிக்கையானோருக்கும் ஏற்பட்ட துன்பம் மட்டுமே மிஞ்சியது.

 

எப்போதும் மாற்று வழிகள் உள்ளன. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு சரியான வழிகள் உள்ளன. பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான வழிகள், நியாயமான புகலிட செயல்முறை மற்றும் கடத்தல்காரர்களை குறிவைக்கும் உண்மையான ஒத்துழைப்பு தேவை. பிரான்ஸ் சிறிய படகுகளையும் கடத்தல் கும்பல்களையும் நிறுத்தவில்லை என்றால் கடத்தல்கள் ஒருபோதும் நிற்காது.

 

அப்பாவியான புகலிடம் தேடுபவர்களை தண்டிப்பது இந்த சிக்கலை ஒருபோதும் தீர்க்காது. பிரித்தானியாவுக்கு கடுமையான தடுப்பு மையங்கள் தேவையில்லை. தைரியம், நேர்மை மற்றும் தலைமைத்துவம் தேவை. பிரித்தானிய நீதியை நம்பி பாதுகாப்பை அடைய எல்லாவற்றையும் பணயம் வைத்த என்னைப் போன்றவர்கள் ஒருபோதுமே பிரச்சனையல்ல. கடத்தல்காரர்களும் தோல்வியடைந்த கொள்கைகளுமே பிரித்தானியாவுக்கு தீராத பிரச்சனை” என்று அவர் மேலும் கூறினார்.

 

இந்த தகவல்களை பிரித்தானியாவில் இருக்கும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் டயான் டெய்லர் (Diane Taylor) என்ற ஊடகவியலாளருக்கு சொல்லியிருக்கிறார்.

 

உள்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் கூறுகையில் சிறிய படகில் சட்டவிரோதமாக பிரிட்டனுக்கு வருபவர்கள் கட்டாயம் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

📰செய்தித் தகவல் மூலம் – தி கார்டியன்.

📰Source – The Guardian.

Recommended For You

About the Author: admin