நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து அக்கரை பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று (20) மதியம் 3 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்களும் இன்று (21) அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 2 படகில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் இவர்களது படகை வழி மறித்து மீனவர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி விட்டு படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் இருந்து தப்பிய மூன்று மீனவர்களும் உடனடியாக கோடியக்கரை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கிருந்து சக மீனவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
இதில் ராஜேந்திரன் என்பவருக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
ராஜ்குமார் என்பவருக்கு தலையில் வெட்டுக்காயம் மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
நாகலிங்கம் என்பவருக்கும் உள்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீன்பிடி வலை, GPS கருவி, தொலைபேசி, மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ரூ. 3 இலட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.