கனமழையால் வவுனியா வடக்கில் பப்பாசிப் பயிற்செய்கை பாதிப்பு; நிலமைகளை நேரில்சென்று பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி
வவுனியா வடக்கு பிரதேசசெயலர்பிரிவிற்குட்பட்ட 21கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த 500 விவசாயிகளினுடைய பப்பாசிப் பயிற்செய்கைகள் கன மழை காரணமாக முழுமையாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாக, பாதிக்கப்பட்ட சில பப்பாசித் தோட்டங்களை வன்னிமாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், விவசாயிகளுக்குரிய நட்டஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு உரியதரப்பினர்களுடன் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, 21கிராமஅலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த, 500 விவசாயிகளுக்கு, பசுமை அக்ரோ பிறைவேட்லிமிட்டட் என்னும் நிறுவனத்தினால் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினூடாக ஒருவிவசாயிக்கு அரை ஏக்கர் வீதம், மொத்தம் 250ஏக்கரில் பப்பாசி, மிளாகாய் பயிற்செய்கை மேற்கொள்வதற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விவசாயிகளின் பாரிய நிதிச்செலவில் செய்கைபண்ணப்பட்ட பப்பாசிப்பயிற்செய்கைகள் அண்மையில் பெய்த கனமழையினால், சில தோட்டங்கள் முழுமையாகவும், சில தோட்டங்கள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பப்பாசிச் செய்கைகள் அறுவடைக்குத் தயாரானநிலையிலேயே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் பாதிக்கப்பட்ட சில விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டதற்கு அமைவாக அவர், நயினாமடு, மதியாமடு, சன்னாசிபரந்தன் உள்ளிட்ட கிராமங்களில் பாதிக்கப்பட்ட பப்பாசிப்பாசிப் பயிற்செய்கைகளைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
அத்தோடு நயினாமடுப் பகுதியில் அமைந்துள்ள பசுமை அக்ரோ பிறைவேட் லிமிட்டட் அலுவலகத்திற்கும் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அங்கும் கலந்துரையாடல் நடாத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்களைக் கேட்டறிந்துகொண்டதுடன், உரிய தரப்பினருடன் பேசி பாதிக்கப்பட்டுள்ள பப்பாசிச் செய்கையாளர்களுக்குரிய நட்டஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.