முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக வருடாந்தம் சுமார் 1100 மில்லியன் ரூபா செலவிடப்படும் நிலையில் மகிந்த ராஜபக்சவுக்காக அதில் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் 60 பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் போதுமானது என, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளின் படி, பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதன் மூலம் அவரின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.