எந்த டீ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது?

காலையில் எழுந்ததும் டீ அருந்தும் வழக்கம் பலருக்கும் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது. கூடவே எந்த டீ பருகுவது உடல் நலனுக்கு நல்லது என்ற விவாதம் நீண்ட காலமாக நீடித்துக்கொண்டிருக்கிறது. அதனால் டீயில் பால் கலந்து பருகலாமா? வெறுமனே தேயிலை கலந்து ‘பிளாக் டீ’யாக ருசிக்கலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. அதனை முன்வைத்து ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்திய புதிய ஆய்வு ஒன்று டீ குடிப்பது எப்படி ஆயுளுக்கு பலம் சேர்க்கும் என்ற கருத்தை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின்படி, 40 முதல் 69 வயதுடையவர்களின் உணவு பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் தேநீர் உட்கொள்ளல் போன்ற விஷயங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவீதம் பேர் டீ பருகுவதை ஒப்புக்கொண்டனர்.

அதிலும் 89 சதவீதம் பேர் இரண்டு முதல் ஐந்து கப் வரை பால் கலக்காமல் ‘பிளாக் டீ’ பருகியுள்ளனர். ஆய்வின்போது ஒரு நாளைக்கு இரண்டு கப் பிளாக் டீ அருந்துபவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவு என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு நாளைக்கு மூன்று கப் பிளாக் டீ பருகுவதால் இறப்பு அபாயம் 12 சதவீதம் குறைந்துள்ளது. பிளாக் டீ பருகுவது, நீரிழிவு, பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

இந்த பானத்தில் பைட்டோநியூட்ரியன்கள், பாலிபினால்கள், கேட்டசின்கள் மற்றும் ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன. ஒரு கப் பிளாக் டீயில் 2.4 கலோரிகள் மற்றும் சிறிய அளவு கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் கொழுப்புகள் உள்ளன.

Recommended For You

About the Author: webeditor