வடக்கில் ஒரு சட்டம், தெற்கில் ஒரு சட்டம் – இனவாதக் கருத்தை வெளியிட்ட தயாசிறி

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தெற்கில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் வடக்கில் குற்றவியல் சட்டத்தையும் பயன்படுத்துவதாக நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியது.

என்றாலும், எதிர்க்கட்சி மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் பொய்யான கருத்துகளை பரப்ப முற்படுவதாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை நிராகரித்ததுடன், அனைவருக்கும் பொதுவான சட்டத்தையே ஆளுங்கட்சி கடைப்பிடிப்பதாகவும் கூறியது.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இனவாதத்துக்கு நாம் எப்போதும் எதிரானவர்கள். அதேபோன்று நினைவுக்கூரல்களை நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம். சிவாஜிலிங்கம் போன்றோர் வடக்கில் பயங்கரவாதிகளை நினைவுக்கூர்ந்தனர்.

ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கில் கைதுகளை செய்ய குற்றவியல் சட்டத்தையும் தெற்கில் உள்ளவர்களை கைதுசெய்ய பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு ஆளும் தரப்பின் சார்பில் பதில் அளித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ”வடக்கில் ஒரு சட்டமும் தெற்கில் ஒரு சட்டமும் பயன்படுத்தப்படுவதாக தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தினார்.

இதுதொடர்பில் நான் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடினேன். அவ்வாறு இரண்டு சட்டங்களின் பிரகாரம் அல்ல பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தான் இரண்டு பகுதிகளிலும் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

அதனால் தயாசிறி ஜயசேகர மீண்டும் இனவாதத்தை பரப்பும் கருத்தைதான் வெளியிட்டுள்ளார். அவர்களது அரசியல் தோல்வியை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தவே இவ்வாறான உண்மைக்கு புறம்பான கருத்துகளை சபையில் வெளியிடுகிறார்.” என்றார்.

இதன்போது மீண்டும் குறிக்கிட்ட ஜயாசிறி ஜயசேகர எம்.பி,

என் வாழ்நாளில் ஒருநாளும் இனவாதத்துக்கு துணைபோனதில்லை என்றார்.

இதற்கு ஆளும் தரப்பு சார்பில் கருத்து வெளியிட்ட சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,

”தயாசிறி எம்.பி குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். அதற்கு துறைசார் அமைச்சர் உரிய பதிலை வழங்கியுள்ளார். சபை நடவடிக்கைகளை கொண்டுசெல்ல வேண்டும் என்பதால் இதனை விவாதமாக்க சபாநாயகர் இடமளிக்க கூடாது. தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டால் அமைச்சர் மீண்டும் கருத்து வெளியிட வேண்டியிருக்கும். தயாசிறி எம்.பிக்கு நாடாளுமன்றில் விசேட உரிமைகள் ஏதும் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

நாடாளுமன்றில் எவ்வளவு காலம் இருந்தோம் என்பதல்ல முக்கியம். 24 வயதுடைய எம்.பி ஒருவரும் இருக்கிறார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் தெரியாதே தயாசிறி எம்.பி பேசுகிறார். நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் இனவாதமானது. அதனால் சபாநாயகர் இதற்கு இடமளிக்க கூடாது” என்றார்.

மீண்டும் குறிக்கிட்ட தயாசிறி எம்.பி,

சபை முதல்வரால் நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்த முடியாது. சபாநாயகர் தான் நாடாளுமன்றத்தை வழிநடத்த வேண்டும். இனவாதக் கருத்துகளை நான் வெளியிட்டதாக கூறும் கருத்தை மீள பெற வேண்டும்.” என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர்,

நிலையியற் கட்டளை 92 உ வின் பிரகாரம் எந்தவொரு எம்.பிக்கு எதிராகவும் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்த கூடாது. அதுதொடர்பில் ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தெரியும். அதனால் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் செயல்படுவோம். அவ்வாறான கருத்துகள் மீள பெறப்பட வேண்டும்” என்றார்.

மீண்டும் எழுந்த சபை முதல்வர்,

நிலையியற் கட்டளைகளில் அனைவரும் பின்பற்ற வேண்டும். என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், தயாசிறி பேசியது முற்றிலும் இனவாதமான கருத்தாகும். அதற்கு துறைசார் அமைச்சர் பதில் அளித்துள்ளார். கருத்தை கூறிய எம்.பி தமது கருத்தை மீள பெற்றால் அமைச்சரால் மீள பெற்றுக்கொள்ள முடியும். வடக்கிற்கு ஒரு சட்டமும் தெற்கிற்கு ஒரு சட்டமும் கையாளப்படுவதாக அவர் கூறியது முற்றிலும் இனவாதக் கருத்தாகும்.” என்றார்.

இதன்போது மீண்டும் கருத்து வெளியிட்ட தயாசிறி எம்.பி, நான் எவ்விதமான இனவாதக் கருத்தையும் வெளியிடவில்லை என்றார்.

இதன்போது எழுந்த யாழ்.மாவட்ட எம்.பி இராமநாதன் அர்ச்சுனா,

”நான் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். கடந்த அரசாங்கங்கள் எம்மை வேறுபடுத்தி தனியாக ஆட்சி செய்தனர். ஆனால், இந்த அரசாங்கம் இதுவரை அவ்வாறு எந்தவொரு செயல்பாட்டையும் செய்யவில்லை. வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனாக நான் இதனை கூற விரும்புகிறேன்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் வடக்கில் இருந்து 3 பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். பொய்யான விடயங்களை கூறியவர்களை நிராகரித்து எம்மை போன்ற சுயாதீன எம்.பிகளையும் அனுப்பியுள்ளனர்.

இவர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளேதான் இனவாதத்தை செய்கின்றனர்.” என்றார்.

இந்த கருத்தை விவாதமாக்க முடியாதென ஆளும் எதிர் கட்சிகளுக்கு இடையிலான சொற்போரை சபாநாயகர் முடிவுக்கு கொண்டுவர அடுத்து உரை நிகழ்த்தவிருந்த சாணக்கியன் எம்.பிக்கு அழைப்பு விடுத்தார்.

Recommended For You

About the Author: admin