“அஸ்வெசும நிவாரணம் பெறும் காலம் மார்ச் 31வரை நீடிப்பு

அஸ்வெசும நிவாரணம் பெறும் குடும்பங்களின் நலன் கருதி, அம்மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் காலத்தை நீடிக்கவும் நிவாரணத் தொகையை அதிகரிக்கவும், அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதென்று, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அரசாங்கத்தின் பிரதம கொறடா மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர்ருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அந்த நிவாரண விவரங்கள் பற்றி அவர் மேலும் கூறியதாவது, “இந்நாட்டில் அஸ்வெசும பெற்றுக்கொள்ளும் மக்களுக்கு மேலதிகமாக, அரசாங்கத்தின் நிவாரணம் பெற்றுக்கொள்ள வேண்டிய மக்கள் இருக்கின்றனர்.
அவர்களுக்குரிய அனைத்து நிவாரணங்களை வழங்கவும், அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
“அஸ்வெசும நிவாரணம் பெறும் இந்நாட்டின் 4 இலட்சம் மக்களுக்கு, டிசெம்பர் 31 வரை வழங்கப்படவிருந்த நிவாரணத்தை, 2025 மார்ச் 31 வரை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம், அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிவாரணம் பெறும் உரிமையை இழக்கவிருந்த மேலும் 4 இலட்சம் பேருக்கு, தொடர்ந்து ஒரு வருடத்துக்கு அந்த நிவாரணத்தை நீடிக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
“அத்துடன், 8,500 ரூபாய் நிவாரணத்தைப் பெற்றுக்கொண்டிருந்த மக்களின் நிவாரணத் தொகையை, 10,000 ரூபாயாக அதிகரிக்கவும் 15,000 ரூபாய் நிவாரணத் தொகையை 17,500 ரூபாயாக அதிகரிக்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
“அத்துடன், முதியோர் கொடுப்பனவு, அங்கவீனமுற்றோருக்கான கொடுப்பனவு மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு உள்ளானோருக்கான கொடுப்பனவுகளையும், எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
“அத்துடன், அஸ்வெசும பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள் மற்றும் விசேட காரணங்களுக்காக நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களின் சிறுவர்களுக்கு, அவர்களின் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, 6,000 ரூபாய் கொடுப்பனவை, அடுத்த ஆண்டு முதல் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளது” என்று, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin