தனது விவாகரத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு, தனது சட்டத்தரணி ஊடாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார்.
இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானும் அதனை உறுதி செய்துள்ளார்.
“நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும்.
மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 1995ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு கதிஜா, ரஹிமா என்ற இரு மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கின்றனர்.
இந்நிலையில், சாய்ரா பானு அதிகாரப்பூர்வமாக கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார். இதன் மூலமாக 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
கணவரை பிரிந்த சாய்ரா பானு தன்னுடைய விவாகரத்துக்கான காரணத்தை கூறியிருப்பதாவது,
“திருமணமாகி பல வருடங்கள் கழித்து தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்.
இந்த முடிவானது தங்களது உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்ச்சிப்பூர்வமான அழுத்தத்திறுகு பிறகு ஏற்பட்டது. மிகுந்த வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் நிலையை புரிந்துகொண்டு மக்கள் அனைவரும் தங்களுக்கான தனிமையை கொஞ்சம் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.