தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் பதவி விலகப்போவதில்லையென அவர் உறுதியாக கூறியுள்ளார்.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி பல்கலைக்கழக கல்வித்துறை மற்றும் கல்விசாரா மாணவர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு நேற்று புதன்கிழமை (20.11.2024) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.
இந்நிலையில் தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்த துணைவேந்தர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“ பதவி விலகும் எண்ணம் இல்லை என் கல்வி அமைச்சர், செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளேன்.
இந்தக் கூற்றுக்கள் தொடர்பாக பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என நம்புகிறேன். குற்றச்சாட்டுகள் நியாயமானதாக இருந்திருந்தால், அரசாங்கம் ஏற்கனவே என் மீது நடவடிக்கை எடுத்திருக்கும்” என்றார்.
இதேவேளை, சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்ற பின்னர் கல்வித்துறை ஊழியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களை கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கி தனிப்பட்ட பழிவாங்கலுக்கு உள்ளாக்கியுள்ளார் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்திருந்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சுஜீவ அமரசேன பதவியேற்றதன் பின்னர் பல மாணவர்களின் கல்வி இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்வி சாரா ஊழியர்களுக்கும் அதே நிலைமைதான்” என்றார்.
இதேவேளை பிரதமருடனான கலந்துரையாடல் வெற்றி பெற்றுள்ளதாக கூறிய பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க துணைவேந்தரை பதவி நீக்கம் செய்யும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என தெரிவித்துள்ளார்.