வடக்கில் திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா? சபா குகதாஸ் கேள்வி

வடக்கில் திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா? என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மைக் கால தரவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை, விற்பனை அதிகரித்திருப்பதாக பல்வேறு அறிக்கைகளிலும் ஊடக செய்திகளிலும் உணர முடிகிறது.

வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் மிகப் பெரும் அபாய நிலையை நோக்கி நகர்வதை நாளாந்த வன்முறைகள், போதைப் பொருள் கடத்தல்கள் நிரூபிக்கின்றன.

மிக வேதனையான விடயம் 18 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்ட இளையோர் பெரும் தொகையில் போதை அடிமைகளாக மாறியுள்ளமை.

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறதா? என்ற சந்தேகம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.

காரணம் நாளைய சமூகத்தின் மற்றும் இனத்தின் தலைவர்கள் என அறிப்படும் இளையோர் சிதைக்கப்படுகின்றனரா ? இது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலா ? திணறுகின்றனர் இனத்தை மற்றும் தேசத்தை நேசிக்கும் மக்கள்.

யாழ் மாவட்டத்தில் 17 சிறிலங்கா அரசின் காவல்த்துறை நிலையங்கள் இருந்தும் போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் விநியோகத்தர்கள் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? காவல்துறையின் அலட்சியமா? போராட்டங்களை வேகமாக அடக்கும் ஆட்சியாளர்கள் போதைப் பொருட்கள் விற்பனை ,பரிமாற்றம் போன்றவற்றை அடக்க ஏன் முடியவில்லை அல்லது ஆட்சியாளரின் பின்னணியில் போதை பொருள் கடத்தல் காரர்கள் உள்ளனரா? என்ற கேள்வி எழுந்தள்ளது.

திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமையாக்கப்படுவதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுப்பது மாத்திரமல்ல தீவிர விழிப்புனர்வு பிரசாரங்களிலும் இறங்க வேண்டும். உரிமைக்காக போராடிய இனம் போதைக்கு அடிமையாகி அழிந்தது என்ற வரலாறு பதிவாகி விடக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor