தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கத் தயார் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை மீள் வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
“எமது நாடு அனைத்து அம்சங்களிலும் பிளவுபட்டுள்ளது. ஆனால் எமது நாடு இவ்வாறு பிளவுபட்டு தொடர்த்தும் முன்னோக்கிச் செல்ல முடியாது. இந்த பிளவுகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவருவதே எமது பிரதான நம்பிக்கை.
“தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியில் எமது செயற்பாடு குறைவு. அதனால்தான் அந்த மக்கள் பழைய கட்சிகளைத் தெரிவு செய்தனர். ஆனால் செப்டம்பர் 21 அன்று நடந்தது என்ன? எமது கட்சி வெற்றி பெற்று அந்த மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அந்த வெற்றியால் மிகவும் உற்சாகமாக அவர்கள் விழித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
“அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல் இயக்கம் வெற்றிபெற வேண்டும். அதுதான் திசைகாட்டியின் வெற்றி.பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள வடக்கில் உள்ள காணிகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு நாம் கவனத்தில் எடுத்துள்ளோம் என்றார்.