“ஒரு அரசியல்வாதி எவ்வாறு செயற்பட வேண்டுமோ அவ்வாறு நேர்மையாகச் செயற்பட்டு இருக்கிறேன் என்று
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(11.11),திங்கட்கிழமை மாலை மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்கள், நான் ஒரு அமைச்சராகவும் , பாராளுமன்ற உறுப்பினராகவும், இருந்த வேளையில் நேர்மையான முறையிலேயே மக்களுக்கு சேவையாற்றியுள்ளேன். “
“அந்த வகையில், இடம்பெயர்ந்த நிலையில் 3 லட்சம் மக்கள் மெனிக் பாமில் வசித்த போது, அவர்களை மீள் குடியேற்றம் செய்த வேளையில், அவர்களுக்கான பணிகளைச் சரியான முறையில் முன்னெடுத்தேன். முல்லைதீவு, கிளிநொச்சி, வவுனியா வடக்கு, மாந்தை மேற்கு, மற்றும் முசலி, நானாட்டான், மடுப் பகுதிகளிலே அவர்கள் மீள்குடியேறிய பொழுது, கண்ணி வெடிகளைஅகற்றிப், பாதைகளை, அமைத்து, பாடசாலைகள், மற்றும் வீடுகளை அமைத்து, வைத்தியசாலைகளைப் புணரமைத்து, அவர்களுக்கான அரச வேலை வாய்ப்புக்கள் மற்றும் வாழ்வாதார வசதிகளை வழங்கியுள்ளோம்.
மேலும்,
கடந்த காலங்களில், மன்னாரிலே
இனம், மதம், கட்சி, பாராமல் எங்களுடைய பணியை நாங்கள் செய்திருக்கிறோம். மன்னாரிலே போடப்பட்ட ஜப்பான் பாலமாக இருக்கலாம். சங்குப்பட்டி பாலமாக இருக்கலாம் அரிப்பு பாலமாக இருக்கலாம், அனைத்திலும் எங்களது பங்களிப்பு உள்ளது.”
“அல்லிராஜா சுபாஸ்கரன் போன்ற பண முதலைகள் வாக்குகளை வீணடிப்பதற்காக, கோடி கோடியாகப் பணத்தைச் செலவழித்துப் பல பல சின்னங்களிலே பலரைப் போட்டியிட வைத்துள்ளனர்.
ஆனாலும் மக்கள் தங்களுக்கேற்ற தலைமையினைத் தெரிவு செய்வதில். தெளிவாகவுள்ளார்கள் அத்தோடு, எங்களது கட்சி நாடளாவிய ரீதியில் பலமாகக் காணப்படுகிறது, நாடளாவிய ரீதியில் எமது கட்சி பத்து ஆசனங்களைப் பெறும் வாய்புள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.