ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோசன் திக்வெல்ல தனது தடையை குறைக்கக் கோரி மேன்முறையீடு செய்யவுள்ளார்.
ஊக்கமருந்து எதிர்ப்பு மேன்முறையீட்டுக் குழுவுக்கு இது தொடர்பில் அவர் எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி எழுத்துமூல கோரிக்கையை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திக்வெல்லவின் வழக்கை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டுக் குழு தீர்மானித்ததை அடுத்து திக்வெல்ல கடந்த புதன்கிழமை அந்தக் குழு முன் தோன்றி இருந்தார்.
இந்த ஆண்டு லங்கா பீரிமியர் லீக் தொடரின்போதே தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கொக்கைனை பயன்படுத்தியது சோதனையில் கண்டறியப்பட்டதை அடுத்தே 31 வயதான திக்வெல்லவுக்கு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் தடை விதிக்கப்பட்டது. ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக மூன்று ஆண்டுகள் தடைக்கு உள்ளான முதல் இலங்கை கிரிக்கெட் வீரராகவும் அவர் உள்ளார்.
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான திக்வெல்ல இலங்கை அணிக்காக 54 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 28 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.