ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் வீட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டினால் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இந்த குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறினார்.
பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஊழியர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பிரித்தானிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்ஸ்தானிகர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்களுக்கு அனுமதி கிடையாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாட்டு தூதரகங்களில் உள்ள ஏனைய அரசியல் நியமனங்களை மாற்றியமைக்க தமது அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு மேலதிகமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணிபுரியும் ஏனையோரும் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் பெரும்பாலானோர் அரசியல்வாதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மீண்டும் அழைக்கப்பட்ட தூதுவர்கள்
15 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வெளிவிவகாரச் சேவையைச் சேராத, ஆனால் அந்தப் பதவிகளில் இருக்கும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம, இந்திய உயர்ஸ்தானிகர் ஷேணுகா சேனவிரத்ன, அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர, வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் ரொட்னி. பெரேரா, ஜப்பான் தூதுவர், சுமங்கலபதி, மலேஷியா உயர் ஸ்தானிகர், நேபாள தூதுவர் சுதர்சன பத்திரன, (முன்னாள் விமானப்படை தளபதி) கியூபா தூதுவர் நிஷாந்த உலுகேதென்ன, முன்னாள் கடற்படை தளபதி, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ரவீந்திர விஜேகுணரத்ன, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உயர்ஸ்தானிகர் உதய இந்துரத்ன, கென்ய தூதுவர் கனநாதன், சீ ஷெல்ஸ் உயர்ஸ்தானிகர் ஸ்ரீமால் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவிவின் உறவினர் ஸ்ரீமால் விக்கிரமசிங்க மற்றும் ஈரான் தூதுவர் மொஹமட் ஷஹீட் ஆகியோருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தூதுவர்களை போன்று தற்போது வெளிநாட்டு சேவையில் உள்ள அமைச்சர்களின் பிள்ளைகள், மனைவிகள் மற்றும் உறவினர்கள் பலரையும் மீண்டும் அழைக்க தீர்மானித்துள்ளதாகவும், அவர்களை டிசம்பர் 1 ஆம் திகதிக்குள் இலங்கைக்கு திரும்புமாறும் கூறப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதவிகளுக்கு தகுதியான வெளிநாட்டு சேவை நிபுணர்களை நியமிக்க புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அழைக்கப்பட்டுள்ள சிலருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் எனவும், அவர்கள் ஒழுக்காற்று செயற்பட்டிருந்தால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.