ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளும் திட்டங்களும் சரியாக இருப்பதாலேயே சர்வதேச ரீதியாக புலம்பெயர் அமைப்புக்களின் உதவிகள் கிடைப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹாலிஎல பகுதியில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட முதன்மை வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தலைமையில் பதுளை மாவட்ட மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க,
“புதியதொரு அரசியல் கொள்கையுடன், புதிய கட்சி ஊடாக, தூய்மைமையான சிந்தனைகளுடன் நாம் அரசியலுக்கு வந்துள்ளோம்.
ஐக்கிய ஜனநாயகக் குரல் அனைத்து இன மக்களையும் சமமாக மதிக்கும் கட்சியாகும். எமக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகள் கிடையாது.
நாம் அனைவரும் ஒரே நாட்டில் பிறந்து, ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இந்த ஒற்றுமையை நாம் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த நிலையில், நாம் ஏன் பிரிந்து செயற்பட வேண்டும்?
எமது கட்சிக்கு தற்போது தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.பொதுத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடும்போது,
ஏன் எமது கட்சிக்கு எதிராக மட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்?
நான் நாடாளுமன்றுக்கு வந்தால், அவர்களின் மனித உரிமை மீறப்படும் என்று எனக்கெதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை நான் சிந்தித்துப் பார்த்தேன். அந்த கருத்து ஒரு வகையில் உண்மைதான். ஆம், நான் நாடாளுமன்றுக்கு வந்தால், திருடர்களின், ஊழல் வாதிகளின், போதைப்பொருள் கடத்தல் காரர்களின், கப்பம் பெறுவோரின் மனித உரிமை பாதிக்கும்தான்.
அத்துடன், எமக்கு பாரிய வர்த்தகர்களும், புலம்பெயர் அமைப்பினரும் உதவி செய்வதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள்.
எமது கட்சியின் கொள்கைகள் சரியானவை.எமது கட்சி ஜனநாயகத்தையும் அனைத்து இன மக்களையும் சமமாக மதிக்கிறது.
இதனால்தான், தேசிய ரீதியாக இருந்து மட்டுமன்றி, சர்வதேச ரீதியாகவும் எமக்கு உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. நேர்மையாக வேலை செய்தால், அனைவரும் உதவிக்கு வருவார்கள். இதனை தடை செய்ய யாராலும் முடியாது. கலைஞர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறுகிறார்கள்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோர் ஆட்சிக்கு வந்தார்கள். இவர்கள் சரியாக அரசியல் செய்யவில்லையா? தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.
மக்களின் உண்மையான பிரச்சினை அறிந்தவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும்.ஐக்கிய மக்கள் சக்தி இன்று எங்கோ சென்றுவிட்டது.
சிலிண்டரும் வெடித்துவிட்டது. அனைவரும் மைக் பின்னால் வந்துள்ளார்கள்” என்றார்.