ஆசிரியர்கள் பாடசாலையில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க முடியாது. அது சட்டத்துக்கு முரணானது என பஃவ்ரல்அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகச்சந்திப்பிலேயே பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
”பொதுத் தேர்தல் தொடர்பில் 1142 முறைப்பாடுகள் பஃவ்ரல் அமைப்புக்கு கிடைத்துள்ளன. பாரிய வன்முறைகள் இடம்பெற்றதான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை.
அரச வளங்கள் மற்றும் அரச அதிகாரத்தை பயன்படுத்தியதான 10 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தல்களில் அரச வளங்கள் மற்றும் அரச அதிகாரத்தை பயன்படுத்தியதான முறைப்பாடுகள் மிகவும் அதிகமாக பதிவாகியிருந்தன. ஆனால், இம்முறை அது மிகவும் குறைவாக உள்ளது.
அரச அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவதாக அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. சில ஊடகங்கள் மத்தியஸ்தத்தை கடைப்பிடிக்காது செய்திகளை வெளியிடுவதை காண முடிகிறது. குறிப்பிட்ட தரப்பினருக்கு மாத்திரம் ஆதரவளிக்கும் வகையில் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
ஆசிரியர்கள் விடுமுறையை பெற்று அல்லது பொதுவான விடுமுறை நாட்களில் அரசியலில் ஈடுபட உரிமை உள்ளது. வேட்பாளர்களாக போட்டியிடும் உரிமையும் அவர்களுக்கு உள்ளது. ஆனால், பாடசாலையில் அவர்கள் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பிரச்சாரங்களை முன்னெடுக்கவும் முடியாது. இதுதொடர்பில் அதிபர்கள் கவனம் செலுத்த வேண்டும். பணி நேரத்தில் ஆசிரியர்கள் ஒருபோதும் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது. பாடசாலையில் பிரச்சாரங்களில் ஈடுபட சட்டத்திலும் இடமில்லை.” என்றார்.