தென்கிழக்கு ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் விரைவான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய நிலையில், இறப்பு சரியாக கணக்கிடுவது சாத்தியமற்றது என வலென்சியா பிராந்தியத்தின் தலைவர் கார்லோஸ் மசோன் தெரிவித்துள்ளார்.
வலென்சியா பகுதியில் உள்ள சிவாவில், செவ்வாய்கிழமை எட்டு மணி நேரத்தில் 491மிமீ மழை பதிவாகியுள்ளது, இது ஒரு வருடத்தின் மதிப்புள்ள மழைக்கு சமம் என்று ஸ்பெயினின் வானிலை சேவை தெரிவித்துள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களிடம் இருந்து உதவிக்காக நூற்றுக்கணக்கான அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்தப் பகுதிகளை அடைய அவசர சேவைகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள லெட்டூர் நகராட்சியில் காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு அவசர சேவைப் பணியாளர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்பெயினின் மாநில வானிலை நிறுவனமான AEMET வலென்சியா பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கையும், அண்டலூசியாவின் பகுதிகளுக்கு இரண்டாவது மிக உயர்ந்த அளவிலான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
எவ்வாறாயினும் நேற்றைய தினம் அனைத்து பாடசாலைகள் மூடப்பட்டதாகவும், விளையாட்டு நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும், பூங்காக்கள் மூடப்பட்டதாகவும் வலென்சியா நகரசபை தெரிவித்துள்ளது.