ஜனாதிபதி அநுரவுக்கு எதிரான மனுவில் கையொப்பம்: உதய கம்மன்பில

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்து ஒரு மாதத்திற்குள்ளேயே சட்டத்தை முறையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அறிவிக்க மனு ஒன்றில் கையொப்பமிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், தமது அரசாங்கம் எந்தவொரு நாட்டிலிருந்தும் கடனோ பணமோ பெறவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் அது அப்பட்டமான பொய். இது தொடர்பாக www.worldbank.org என்ற இணையதளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக அதனை சரிபார்க்க முடியும்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஒரு மாத காலத்திற்குள் திறைசேரி பத்திரங்களை வெளியிட்டு 95,000 கோடி ரூபா கடனாகப் பெற்றுள்ளார்.

இந்தக் கடனுடன் தனி நபர் ஒருவர் மீது 43,006 ரூபா கடன் காணப்படுகின்றது. இது கின்னஸ் சாதனையாக அமையும் என நம்புகிறேன்.

அடுத்த ஐந்து வருடங்களுக்கு கடன்களை பெற்றுக் கொண்டால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது இருந்த கடன் தொகையை விட இலங்கையின் கடன் தொகை மூன்று மடங்கு அதிகரிக்கும்.

பணம் அச்சிடப்பட்டமை குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையை அவதானித்தால் அந்நியச் செலாவணியை பெறுவதற்காக பணம் தயாரிக்கப்பட்டது என்பதையே அது உணர்த்துகிறது.

இவ்வாறு கடன்களை பெற்றுக் கொண்டால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்களை விரைவில் பார்வையிட முடியும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

பணம் அச்சிடப்பட்டதா? மத்திய வங்கி பதில்

திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

வட்டி வீதங்களை நிர்வகிப்பதன் மூலம் விலை ஸ்திரத்தன்மையை பராமரிக்க திறந்த சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மத்திய வங்கியின் திறந்த சந்தை செயற்பாடுகள் மூலம் பணப்புழக்கத்தை ஏற்படுத்துவது மத்திய வங்கியின் வழமையான நடவடிக்கையாகும்.

வங்கி அமைப்பில் போதுமான பணப்புழக்கத்தை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்ட மத்திய வங்கியின் வழக்கமான செயற்பாட்டை பணம் அச்சிடல் என தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

இதனூடாக, அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக பணம் அச்சிடல் அல்லது முறையற்ற பண விநியோகம் இடம்பெறவில்லை.

இங்கு நடந்திருப்பது மத்திய வங்கியின் விலை ஸ்திரத்தன்மையின் நோக்கங்களை அடைவதற்கான ஒரு சாதாரண செயற்பாடாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன குற்றம் சுமத்தியிருந்தார்.

அரசாங்கம் இவ்வாறு பணத்தை அச்சிடுவதன் மூலம் கப்ரால் – கோட்டாபய யுகம் நினைவிற்கு வருவதாக தெரிவித்த அவர் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் பணம் அச்சிடுவதனை வரையறுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை எனவும் தாம் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தும் வெளிநாட்டுக் கடனைப் பெறவில்லை என்றும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்திருந்தார்

Recommended For You

About the Author: admin