தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பார்வையற்றவர்களுக்கான குடியிருப்புப் பகுதி உள்ளது.
அதில் 60 வயதான கணவன், மனைவி மற்றும் அவர்களது 30 வயதான மகன் மூவரும் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களாக அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பில் அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அவர்களது வீட்டை சோதனை செய்ததில் அந்தத் தம்பதியின் மகன் உயிரிழந்து கிடந்தமை தெரிய வந்துள்ளது.
நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் உறக்கத்திலேயே உயிரிழந்திருந்தமை தெரிய வந்துள்ளது.
உடற்கூராய்வுக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த உயரதிகாரி, “பார்வையற்ற தம்பதிக்கு அவர்களது மகன் உயிரிழந்தமை தெரியவில்லை. நான்கு நாட்களாக அவரிடம் உணவும் தண்ணீரும் கேட்டபடி இருந்துள்ளனர். ஆனால், மகனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதனால் நான்கு நாட்களாக உணவும் தண்ணீரும் இல்லாமல் தம்பதியினர் தவித்துள்ளனர்.
அவர்களால் சரியாக பேசவும் முடியாத காரணத்தால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களாலும் அவர்களது குரலை கேட்க முடியாமல் இருந்துள்ளது.
உணவு, நீரின்றி அரை மயக்கத்திலிருந்த தம்பதிக்கு பொலிஸார் உணவும் தண்ணீரும் கொடுத்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.