தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்ற லட்சக்கணக்கான தொண்டர்களை கண்கலங்கினார் கட்சித் தலைவர் நடிகர் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (27) நடைபெற்றது.
நடிகா் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் ஆரம்பித்த நிலையில், கட்சிக்கான கொடியும், கொடிப் பாடலும் கடந்த ஓகஸ்ட் 22-ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்டன.
பின்னா், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபா் 27-இல் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறும் என கட்சித் தலைவா் விஜய் அதிகாரப்பூா்வமாக அறிவித்தாா்.
இதையடுத்து, காவல்துறை சாா்பில் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 33 நிபந்தனைகளை விதித்து, அவற்றில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி மாநாட்டுப் பணிகள் தொடங்கின.
மாநாட்டின் முகப்பில் சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டை மதில் சுவா் வடிவத்தில் டிஜிட்டல் பதாகைகள் அமைத்து, அதன் மேற்பகுதியில் மிகப்பெரிய அளவிலான விஜயின் உருவப்படம் பொருத்தப்பட்டது.
இதுதவிர, பெரியாா், காமராஜா், அம்பேத்கா் உள்ளிட்ட தலைவா்கள், சேர, சோழ, பாண்டியா்களின் டிஜிட்டல் பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.
இன்று மாலை 3 மணியளவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு தொடங்கியது.
மாநாட்டு முகப்பு மேடைக்கு வருவதற்கு 600 மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டிருந்த ‘ரேம்ப் வாக்’ பகுதியில் இருபக்கமும் கூடியிருந்த தொண்டர்களுக்கு மத்தியில் உற்சாகமாய் நடந்துவந்தவர்.
அவர்கள் தூக்கியெறிந்த கட்சியின் கொடி நிறத்திலான சால்வைகளை கொஞ்சமும் சளைக்காமல் கீழே குனிந்து எடுத்து தன் கழுத்தில் அணிந்துகொண்டார்.
பின்னர், திரும்பி அதை அவர்களுக்கே கொடுத்தபடி உற்சாகமாக மேடைக்கு வந்தார்.
பின்னர் தனது கழுத்தில் இருந்த எல்லாத் துண்டுகளையும் எடுத்துவைத்துவிட்டு, ஒரெயொரு துண்டை மட்டும் கழுத்தில் போட்டுக் கொண்டார்.
பின்னர் மாநாட்டு மேடையில் நின்றபடியே பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைப் பார்த்த விஜய் கண்கலங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து 101 அடி உயர கொடிக் கம்பத்தில் ரிமோட் மூலம் கட்சிக் கொடியேற்றி வைத்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசியல் அரங்கில் புதுவரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்துள்ளது.
கட்சி தொடங்கப்பட்டு சுமார் 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அதன் கொள்கைகள் என்ன? அரசியல் எந்த பாதையில் பயணிக்கப் போகிறது? என்று நிலவிய எதிர்பார்ப்புகளுக்கு பதில் தரும் நிகழ்வாக இந்த மாநாடு அமைந்திருந்தது.
ஓர் அரசியல் தலைவராக தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தனது தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜயின் முதல் பேச்சு எப்படி இருந்தது? அவர் என்னென்ன விஷயங்கள் பற்றி பேசினார்? என்பது குறித்து இங்கு ஆராய்வோம்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேச்சைத் துவங்கிய விஜய், ஒரு குழந்தை தனது தாயைப் பார்த்து சிரிப்பது போல, தன்முன் ஒரு பாம்பு வந்தால் அதனையும் பயமின்றிப் பிடித்து விளையாடும், என்றார்.
“அதேபோல, அரசியல் ஒரு பாம்பு. பயமறியா ஒரு குழந்தையைப் போல அதைக் கையில் பிடித்து விளையாடுகிறேன்,” என்றார் அவர்.
மேலும், “அரசியலில் நான் ஒரு குழந்தை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அரசியல் பாம்பைக் கண்டு இந்தக் குழந்தைக்கு பயமில்லை,” என்றார்.
“அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது, இது ஒரு போர்க்களம். தீவிரமாக, ஆனால் சிரிப்போடு எண்ணங்களைச் செயல்படுத்துவதுதான் என் வழி.
அரசியலில் கவனமாகக் களமாடவேண்டும். ஏனெனில், சினிமா பாடல் வெளியீட்டு நிகழ்வில் பேசியதிலிருந்து இது வித்தியாசமான மேடை,” என்றார்.
பேச்சை ஆரம்பித்து இவற்றைச் சொன்னபிறகு, தான் உணர்ச்சிவசமாக பேசப்படும் வழக்கமான மேடைப் பேச்சின் பாரம்பரியத்திலிருந்து விலகி வந்துவிட்டதாகக் கூறினார் விஜய்.
தனது கட்சி நிர்வாகிகளின் பெயரைச் சொல்லி, ‘அவர்களே… அவர்களே…’ என்று அவர்களை அழைத்தவர், “வழக்கமான அரசியல் பேச்சுகளைப் போல அப்படி ஏன் பேசவேண்டும்? நாம் அனைவரும் ஒன்றுதான்,” என்றார்.
“அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாறவேண்டுமா? அரசியலும் மாற வேண்டும். மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை.
இப்போது என்ன பிரச்சினை, அதற்கு என்ன தீர்வு என்பதைச் சொன்னாலே மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்,” என்றார் விஜய்.
“இன்று இருக்கும் தலைமுறையைப் புரிந்துகொண்டால்தான் அரசியலைச் சுலபமாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.
மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி நேரம் விரயம் செய்யப் போவதில்லை, ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை.” என்று கூறினார்
‘பெரியாரைப் பின்பற்றுவோம், ஆனால்…’
கட்சியின் கொள்கை வழிகாட்டிகள் பற்றி விஜய் பேசினார்.
‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார், என்ற அவர், “ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையைப் பின்பற்றுவோம்,” என்றார்.
“அதாவது, ஒவ்வொரு தனிமனிதரின் கடவுள் வழிபாடு என்பது அவரவர் விருப்பம். அதில் கட்சி எந்த வகையிலும் தலையிடாது. அதேநேரத்தில், பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும்,” என்றார் நடிகர் விஜய்.
‘பெண்களை வழிகாட்டியாக கொண்ட முதல் கட்சி’
காமராஜரின் மதச்சார்பின்மை, நேர்மையான நிர்வாகச் செயல்பாடு, அம்பேத்கரின் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவ கோட்பாட்டை நிலைநிறுத்துவதும், சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதுமே நமது நோக்கம், என்றார் அவர்.