அமெரிக்காவில் அடுத்த மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கிறது.
பிரதான இருவேட்பாளர்களான அமெரிக்காவின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் ஜோர்ஜியாவில் இடம்பெற்ற பேரணிகளில் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
டிரம்ப் மீதான குற்றவியல் முறைப்பாடுகளை கமலா ஹாரிஸ் விமர்சித்துப் பேசியதுடன் ட்ரம்ப் தன்னைப் பற்றி மாத்திரமே நினைக்கிறார் எனவும் அவர் அமெரிக்க மக்களைப் பற்றி நினைப்பதில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை, அமெரிக்கர்கள் கமலா ஹாரிஸிடமிருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், 50 அமெரிக்க மாநிலங்களில் 26 மாநிலங்களில் ஆரம்ப வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.
அண்மைய கருத்துக் கணிப்புகள், ட்ரம்பை விட ஹாரிஸ் முன்னிலை வகிக்கின்ற போதிலும் முக்கிய மாநிலங்களில் இருவரிடையே பாரிய இடைவெளி இல்லை எனக் கூறப்படுகின்றது.