அமைச்சுகளின் செலவினங்களைச் சமாளிக்கவும், திறைசேரி பத்திரங்கள் மற்றும் பிணைமுறைகளை மீளச் செலுத்துவதற்கும் உள்ளூர் நிதிச் சந்தையில் இருந்து நிதி சேகரிக்கப்படுகிறதே தவிர புதிய கடன்களை பெற மாட்டோம் என ஜனாதிபதியின் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் அதிகரித்துள்ளதாக சிலர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“அரசாங்கத்திற்கு அதன் அன்றாட அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிக்கவும், சேவைகளை இயக்கவும் நிதி தேவைப்படுகிறது. ஒவ்வொரு வாரமும், மத்திய வங்கி திறைசேரி பத்திரங்கள் மற்றும் பிணைமுறிகளை விற்பனை செய்வதன் ஊடாக நிதியை திரட்டுகிறது. உரிய திகதியில் திருப்பிச் செலுத்தல்களும் இடம்பெறுகிறது. இது ஒரு சாதாரண செயல்முறை.
அரசாங்கம் புதிதாக கடன்களை பெறவில்லை. வழக்கம் போல், நிதி சேகரிப்பு மட்டுமே நடைபெறுகிறது. இதனை தவிர, உள்ளூர் நிதிச் சந்தையில் சிறப்பு, விசித்திரமான அல்லது அசாதாரணமான நிதி சேகரிப்பு எதுவும் செய்யப்படவில்லை.
ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ள படி நாங்கள் உள்ளூர் அல்லது வெளிநாட்டு நிதிச் சந்தைகளில் கடன்களை பெறவில்லை. நிதிச் சந்தையை ஸ்திரப்படுத்துவது இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாகும். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கோரிக்கை விடுக்கப்பட்ட சில நிதிகள் திறைசேரிக்கு வருகின்றன.” என்றார்.