மனித உரிமை மீறல்கள்: உள்ளக பொறிமுறை ஊடாகவே விசாரணை

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக உள்ளக பொறிமுறை ஊடாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக தேசிய பொறிமுறைக்கு சர்வதேச மனித உரிமை பொறிமுறையின் ஆலோசனை பெறப்படக்கூடும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போது மனித உரிமை விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக புதிய ஆட்சியின்கீழ் சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.தேர்தலுக்கு பின்னர் எவ்வித தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை.

தற்போதைய தேர்தல் காலப்பகுதியிலும் அதேபோன்றதொரு அமைதியான சூழ்நிலையை பாதுகாப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேசிய பொறிமுறை ஊடாக உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்படும். ஜெனிவா கூட்டத்தொடரிலும் இது தொடர்பில் எமது நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எமது நாட்டு அரசமைப்பு, குற்றவியல் சட்டம் உட்பட ஏனைய சட்டங்களுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்ல எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படும்.

சர்வதேச மனித உரிமை சட்ட திட்டம், பொறிமுறைகளின் உதவிகளும் பெறப்படும். எது எப்படி இருந்தாலும் தேசிய பொறிமுறை ஊடாகவே நடவடிக்கை இடம்பெறும்.” – என்றார்.

Recommended For You

About the Author: admin