கடும் பொருளாதார வீழ்ச்சியால் இலங்கைத்தீவு வங்குரோத்து நிலையை அடைந்திருந்த போது நாட்டை பொறுப்பேற்ற ரணில் விக்கரமசிங்க தனது ஜனாதிபதி பதவிக்காலமான 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரையிலான 26 மாத காலப்பகுதியில் 24 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அவர் பதவியேற்ற 2022ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டில் 16 நாடுகளுக்கும் 2024ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022 வருடாந்திர செயல்திறன் அறிக்கைக்கு ஏற்ப குறித்த ஆண்டுக்காக ஜனாதிபதி செயலகத்தால் அதி உயர் பிரமுகர்களுக்கான பயணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 62,178,000 ரூபாய் எனும் நிலையில் அதில் 59,020,000 ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது. அது ஒதுக்கப்பட்ட தொகையில் 95 வீதம் ஆகும்.
வெளிவிவகார அமைச்சின் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2023 வருடாந்திர செயல்திறன் அறிக்கைக்கு ஏற்ப அவ்வாண்டில் அதி உயர் பிரமுகர்களுக்காக பயணங்களுக்காக ஜனாதிபதி செயலகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 384,853,000 ரூபாய் என்பதுடன் அதில் 373,809,000 ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது. அது ஒதுக்கப்பட்ட தொகையில் 97 வீதம் ஆகும்.
2024ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி செயலகம், அதி உயர் பிரமுகர்களின் பயணங்களுக்காக எவ்வளவு தொகையை செலவளித்துள்ளது என்பது தொடர்பிலான உறுதியான அறிக்கை காணப்படவில்லை.
எனினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்களுக்கான விமானப் பயணச்சீட்டுக்கு செலவளித்த தொகை தொடர்பிலான அறிக்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024ஆம் ஆண்டில் பயணித்த ஸ்விட்சர்லாந்து, உகண்டா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் விபரங்கள் மாத்திரம் உள்ளடங்குவதுடன் 2024ஆம் ஆண்டு மே மாதம் பயணித்த இந்தோனியா பயணம் குறித்து எதுவித தகவல்களும் உள்ளடங்கவில்லை.
அந்த அறிக்கையின்படி, சுவிஸ்லாந்து மற்றும் உகண்டாவுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கான விமான பயணச்சீட்டுகளுக்காக 16,825,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஆஸ்திரேலிய பயணத்துக்கு கட்டணம் செலுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தொகை ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணித்த ஏனையவர்களுக்கான தொகையும் அதில் உள்ளடங்குவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.