பிரதான அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியாகின!
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலுக்காக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ, காமினி லொகுகே, சி.பி. ரத்நாயக்க, வண.உத்துராவல தம்மரதன தேரர், திஸ்ஸ விதாரண, ஜயந்த கெட்டகொட, சாகர காரியவசம், திசக்குட்டி ஆராச்சி, ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களாக பிமல் ரத்நாயக்க, பேராசிரியர் வசந்த சுபசிங்க, கலாநிதி அனுர கருணாதிலக்க, ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் பிரதான வேட்பாளர் ஒருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்சியில் இடம்பெற்றுள்ளனர்.
சர்வஜன பலய கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்
இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானத்தினை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் முன்னாள் பிரதமருடனும் கலந்துரையாடிய போதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.