கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதமானது ஆண்டுதோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி வரை இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கப்படும்.

இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் சிவனதும் சக்தியினதும் அருளால் சகல சௌபாக்கியங்களையும் பெற்று, தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து, வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன.

இவ்விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர். திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக திகழ வேண்டியும், மணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் அனுஷ்டிக்கின்றனர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் விரதம் நோற்கின்றனர்.

விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சாக இட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோவில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடது கையிலும் அணிந்துகொள்வர்.

இந்த காப்பை ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக் கையிலும் முழங்கைக்கும் தோள்பட்டைக்கும் இடையில் கட்ட வேண்டும். மேலும், முதல் 20 நாட்களும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவு சாப்பட்டு, இறுதி நாளாகிய சதுர்த்தசியன்று உபவாசம் இருந்து, மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்னர் ‘பாரணம்’ இருந்து விரதத்தை முடித்தல் வேண்டும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியை பெற்றதுடன், பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினை பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையை வாகனமாக கொண்டார்.

இந்த கேதார கெளரி விரதத்தின் மகிமையை இவ்வளவு தான் என யாராலும் வரையறுத்து கூற இயலாது.

இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வர்யம் பெருகும், வறுமை ஒழியும், நினைத்த காரியம் கைகூடும்.

இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டதற்கிணங்கி சிவனும் அருள் பாலித்தார் என புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

எனவே, நாமும் இவ்வரிய நோன்பினை நோற்று, பரம்பொருளின் பூரண கடாட்சத்தை பெற்று, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக!

Recommended For You

About the Author: admin