அம்பாறை மாவட்டத்தில் EPDP தனித்து போட்டி!

திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில் இன்று (08) நடைபெற்றபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது
ஈபிடிபியின் முதன்மை வேட்பாளராக இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றேன்.ஈழமக்கள் ஜனநாயக கட்சி(EPDP) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்.அதுமாத்திரமன்றி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகவும் இருந்து வருகிறேன்.
கடந்த காலங்களில் தேசியத்துடன் நாங்கள் சென்றவர்கள். தற்போதுள்ள காலகட்டத்தில் எமக்கு தேசியத்துடன் உடன்பாடு இல்லை.காரணம் மக்களை ஏமாற்றி வாக்குகளை சுவீகரிக்கின்ற நிலைதான் தொடர்ந்து வருகின்றது.
தற்போது மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களுக்கான வாழ்வாதாரங்களை பெற்றுக்கொடுப்பது தான் எமது முதல் நோக்கமாகும்.இதை விட்டுவிட்டு வெறுமனே தேசியத்தை பேசிவிட்டு காலத்தை கடத்துவது ஒரு உசிதமான விடயமல்ல.
எமது மாவட்டத்திற்கு கடந்த கால தேர்தல்களில் பல கட்சியினர் வருகின்றார்கள், போகின்றார்கள்.வாக்கு கேட்கின்றார்கள். அத்துடன் அவர்களின் விடயங்கள் முடிந்து போகும்.ஆனால் இங்கு நாங்கள் மாத்திரமே மக்களுக்காக உண்மையாக செயற்பட்டு வருகிறோம்.
இம்முறை தேசியத்தை விட்டு ஈபிடிபி கட்சியை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் கடந்த 30 ஆண்டு காலமாக தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எம்.பியாக வெற்றி பெற்று பல்வேறு அமைச்சுகளை பெற்று மக்கள் சேவை செய்து வருகின்றார்.
அவருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கினால் எம்மக்கள் நன்மை பெறுவார்கள்.சிலர் அவரை நோக்கி இங்கு என்ன அபிவிருத்திகளை செய்துள்ளார் என குற்றஞ்சாட்டுகின்றனர். அது பொருத்தமான கேள்வி அல்ல என்றே கூறுவேன்.
வடகிழக்கில் அவர் தனது சேவை காலத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றார். ஆனால் அவரிடம் இங்குள்ளவர்கள் அணுகி எதுவும் கேட்டதாக எனக்கு தெரியவில்லை. மக்களோ அல்லது சங்கங்களோ அவருடன் சந்தித்து கதைத்து அவரிடம் பெறுவோம் என்றும் நினைத்ததில்லை.ஆனால் மக்களின் அபிலாஷைகளை எம்போன்ற தலைவர்களால் தீர்த்து வைக்க முடியும் என்றார்.

Recommended For You

About the Author: admin