மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள்?

”தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள், நாட்டுக்கு மீண்டும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் விசேட வைத்திய நிபுணர், சமன் சன்ஜீவ இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தரமற்ற மருந்து மற்றும் தடுப்பூசிகள் சந்தையில் விநியோகிக்கப்பட்டு, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவங்கள் கடந்த காலங்களில் நாட்டில் நிகழ்ந்திருந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை நடத்தியிருந்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தரமற்ற மனித இம்யுனோகுளோபின் மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் இந்தியாவிலிருந்து தரமற்ற மனித இம்யுனோகுளோபின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுதொடர்பாக தீவிர மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது குறித்து விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ கருத்துத் தெரிவிக்கையில்”
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த காலத்திலும், நாட்டுக்கு இந்தியாவிலிருந்து தரமற்ற இம்யுனோகுளோபுலின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மருந்து விநியோகப் பிரிவின் தலைவர் தேதுன் டயஸினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இம்யுனோகுளோபுலின் மருந்துகளும் தரமற்றவை என்பதால், செப்டம்பர் மாதத்திலேயே இந்த மருந்துத் தொகைகளை பயன்பாட்டிலிருந்து நீக்கிவிட்டதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீண்டும் மீண்டும் தரமற்ற மருந்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்படும் நிலையில், சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையானோரின் உயிருக்குள்ள உத்தரவாதம் தான் என்ன? மருத்துகளின் தரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், மருந்துகளின் பதிவின்போது மேற்கொள்ளப்படும் உரிய முறைகளுக்கு அப்பாற் சென்று, அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகள் தேவைக்காகவே இவ்வாறான மருந்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றன.

இந்த மருந்து தற்போது பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டாலும், இதனைக் கொண்டுவர செலவான மில்லியன் கணக்கான நிதிக்கு யார் பொறுப்பு கூறுவது? எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அனைத்து அதிகாரிகளுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin