இலங்கையின் சுழலில் சுருண்ட நியூசிலாந்து : 15 ஆண்டுகளின் பின் சாதனை படைக்கவுள்ள இலங்கை
இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
முன்னதாக முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 602 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்நிலையில் 514 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இந்த 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. அல்லது போட்டி சமநிலையில் நிறைவடைந்தாலும் இலங்கை அணி 15 ஆண்டுகளின் பின் நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடர் வென்ற வரலாற்றை பதிவுசெய்யும்.
இலங்கை அணி கடைசியாக நியூசிலாந்து அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடந்த 2009ஆம் ஆண்டு சொந்த மண்ணில் வைத்து 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியதே சாதனையாகும். இதேவேளை இலங்கை அணி காலி மைதானத்தில் நியூசிலாந்துடன் விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளமையும் விசேட அம்சமாகும்.